Published : 20 May 2022 12:54 PM
Last Updated : 20 May 2022 12:54 PM
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில், விசாரணைக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான விசாரணைக் குழு தரப்பில், இதுவரை இந்த வழக்கில் 29 மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பிற துறை நிபுணர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தேவையான தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.
இதனையடுத்து, விசாரணைக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி என்ன? இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தையே உலுக்கியது. ஒரு கூட்டத்தொடர் முழுவதுமே இவ்விவகாரத்தில் அதிகபட்ச ஒத்தி வைப்புகளையும், அமளிகளையும் சந்தித்தை மறந்திருக்க இயலாது.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான 'ஃபர்பிடன் ஸ்டோரிஸ்' மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கண்டுபிடித்தது. இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் 'தி நியூயார்க் டைம்ஸ்', 'கார்டியன்', 'லீ மாண்டே' ஆகிய நாளேடுகள் வெளியிட்டன.
அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்தே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கக் கோரி பல்வேறு பொதுநல வழக்குகள் பதிவாகின.
விசாரணைக் குழுவின் பணி என்ன? இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் குற்றச்சாட்டைப்பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
இந்திய குடிமக்களின் அலைபேசிகளில் அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களின் சேமிக்கப்பட்ட தரவுகளை எடுக்கவும், உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், அவர்கள் தொடர்பான தரவுகளை டவுன்லோடு செய்யவும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணி. இத்தகைய உளவு தாக்குதல்களை தடுக்க, கண்காணிக்க மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒருவேளை இந்திய அரசே இந்தியக் குடிமக்களை உளவு பார்த்ததா? அப்படி உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அதன்படியே இதுவரை 29 செல்போன்களை இந்தக் குழு ஆய்வு செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கை வெளியானால் இந்திய அரசியலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT