Published : 19 May 2022 07:14 PM
Last Updated : 19 May 2022 07:14 PM
கொல்கத்தா: "சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "அரசு புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸை தடுத்து நிறுத்திட முடியும் என்று அவர்கள் (பாஜக) நம்பினால் அது தவறு. நாங்கள் மிகவும் வலிமையாக உள்ளோம்.
மேற்கு வங்கத்தில் பாஜக அடைந்த தோல்விக்கு பின்னரும் அவர்கள் வெட்கப்படவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படுகிறார்கள். அதனால்தான் இங்கு வன்முறை நடக்கிறது என்று பாஜகவினர் பொய் சொல்லி வருகிறார்கள். இவ்வளவு பெரிய மாநிலத்தில் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடப்பதைக் கூட நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
பணியாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதில், தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய இடதுசாரிகளின் ஆட்சியில் துண்டு காகிதத்தில் பெயர் எழுதி வேலை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த முறைகேடுகளை வெளியிடுவேன்" என்று பேசினார்.
மாநிலத்தில் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் மூலம் நடைபெற்ற நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றசாட்டினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1,352 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியது. கடந்த ஆண்டு இருவர் மீதும் அமலாக்கத் துறை வழக்குபதிவு செய்தது. ஊழல் தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இருவருக்கும் அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கொல்கத்தாவில் தன்னிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கோரினார்.
இதை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, சமீபத்தில் கொல்கத்தாவில் அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. ‘‘அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கு வங்க அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகாரிகள் விசாரணைக்கு வரும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும். கொல்கத்தாவில், விசாரணை நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர், அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT