Published : 19 May 2022 11:19 AM
Last Updated : 19 May 2022 11:19 AM
லக்னோ: கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது.
வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகரின் உத்தரவின்படி கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது. 3 நாட்கள் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில், கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது.
இந்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், கியான்வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் தொடர்பான பழைய வழக்கிலும் ஒரு திருப்பம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT