Last Updated : 19 May, 2022 06:20 AM

9  

Published : 19 May 2022 06:20 AM
Last Updated : 19 May 2022 06:20 AM

கர்நாடகாவில் தொண்டர்களுக்கு பஜ்ரங் தளம் ஆயுதப் பயிற்சி: 2 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் பஜ்ரங் தளம் தொண்டர்கள்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னாம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் பஜ்ரங் தளம் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்திய புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய கட்சியினர் பஜ்ரங் தளம் அமைப்பினருக்கு எதிராக மடிகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், “பஜ்ரங் தளம் அமைப்பின் சார்பில் அமைப்புகளின் தொண்டர்கள் 116 பேருக்கு கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பொன்னாம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள‌து. இதில் துப்பாக்கி சுடுதல், வாள் வீச்சு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு குடகு மாவட்டத்தைச் சேர்ந்த‌ பாஜக எம்எல்ஏக்கள் கே.ஜி. போப்பையா, அப்பா சுரஞ்சன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பயிற்சியினால் சமூக அமைதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, “இந்த ஆயுதப் பயிற்சிக்கு என்ன அவசியம் இருக்கிறது? மத கலவரத்தை தூண்டுவதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறதா? உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு குடகு மாவட்ட பஜ்ரங் தளம் தலைவர் ரகு சக்லேஷ்பூர் கூறும்போது, “தற்காப்பு கலை தொடர்பாக இளைஞர்களுக்கு ஒரு வார கால பயிற்சி அளித்தோம். அதில் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, மனவள பயிற்சி ஆகியவற்றை போன்று வேறு சில பயிற்சிகளும் வழங்கினோம். நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்தினோம்.

தற்காப்பு கலையின் அங்கமான‌ ‘திரிசூல‌ தீட்சை’க்காக கத்தி, துப்பாக்கியை வைத்து பயிற்சி வழங்கப்பட்டது. இது ஆயுத தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல” என்றார்.

இந்நிலையில், மடிகேரி போலீஸார் வீராஜ்பேட்டை எம்.எல்.ஏ. கேஜி போப்பையா, மடிகேரி எம்.எல்.ஏ. அப்பா சுரஞ்சன், எம்.எல்.சி. சுஜா குஷாலப்பா, பஜ்ரங் தளம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரகு சக்லேஷ்பூர், விஹெச்பி அமைப்பின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x