Published : 16 May 2022 07:38 AM
Last Updated : 16 May 2022 07:38 AM
புதுடெல்லி: பாலியல் புகாரில் ராஜஸ்தான் அமைச்சரின் மகனைக் கைது செய்ய டெல்லி போலீஸார் ராஜஸ்தான் சென்ற நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித். இவருடன் பேஸ்புக் மூலம் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
தனக்கு தெரியாமல் தன்னை ரோஹித் நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டியதாகவும் கருவுற்ற நிலையில், கருக்கலைப்பு மாத்திரை சாப்பிடும்படி கட்டாயப் படுத்தியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டெல்லி சதார் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
புகார் தொடர்பாக அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகனைக் கைது செய்ய டெல்லி போலீஸார் நேற்று ராஜஸ்தான் சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள அமைச்சரின் 2 வீடுகளுக்கும் சென்றனர். இரண்டு இடங்களிலும் ரோஹித் இல்லை. அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, வரும் 18-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை அவரது வீட்டின் சுவற்றில் டெல்லி போலீஸார் ஒட்டினர். இது தொடர்பாக அமைச்சர் ஜோஷி கூறுகையில், ‘‘நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். டெல்லி போலீஸார் என்னிடம் வந்தால் அவர்களின் விசாரணைக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கு வேன்’’ என்றார்.
ஆனால், அமைச்சரின் மகனை காப்பாற்ற மாநில அரசு முயற்சிப்பதாக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா குற்றம் சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT