Published : 11 May 2022 12:40 PM
Last Updated : 11 May 2022 12:40 PM
புதுடெல்லி: டெல்லியில் இந்து அமைப்பினரால், குதுப்மினார் முன் அனுமன் மந்திரம் ஓதப்பட்டது. கில்ஜி மன்னரால் கட்டப்பட்டதும் பெயரை, 'விஷ்ணு மினார்' என மாற்றவும் வலியுறுத்தினர்.
முகலாயப் பேரரசுக்கு முன்பாக இந்தியாவை ஆண்டது கில்ஜி வம்சம். டெல்லி சுல்தான்கள் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமியர்களான இவர்களின் முதல் மன்னர் குத்புதீன் ஐபக். இந்த கில்ஜி வம்ச மன்னரால், கடந்த 1198ஆம் ஆண்டில் தொடங்கி டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டது குதுப்மினார். தற்போது டெல்லியின் மெஹரோலி பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க இடம் மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தினரிடம் உள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமாகவும் உள்ள இந்த குதுப்மினாரையும் சமீப காலமாக இந்துத்துவா அமைப்பினர் குறி வைத்துள்ளனர். இந்தவகையில், குதுப்மினாரின் முன் நேற்று கூடிய மஹா கால் மானவ் சேவா எனும் இந்து அமைப்பினர் திடீர் எனக் கூடினர். சுமார் 20 பேர் கொண்டக் குழுவிற்கு அதன் தலைவரான ஜெய் பகவான் கோயல் எனும் துறவி தலைமை தாங்கினார்.
இவருடன் காவி உடைகளுடன் அதேநிறக் கொடிகளுடன் இளஞர்களும் இருந்தனர். 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கோஷமிட்டபடி இவர்கள், குதுப்மினார் வளாகத்தில் நுழைந்து, அதன் வாயிலின் முன் அமர்ந்தனர்.
பிறகு, ஒரே குரலில் அனைவருமான அனுமன் மந்திரம் ஓதத் தொடங்கினர். இதை அங்கு வந்த சுற்றுலாவாசிகள் கூட்டம் வேடிக்கைப் பார்க்கக் கூடியது.
இவர்கள் முன்பாகப் பேசிய அந்த இந்து அமைப்பின் தலைவர் ஜெய் பகவான் கோயல் கூறும்போது, ''ஜெயின் மற்றும் இந்து கோயில்களை இடித்து சனாதன தர்மத்தினர் நிலத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், குதுப்மினாரின் பெயரை விஷ்ணு மினார் என மாற்ற வேண்டும். டெல்லியில் முஸ்லிம் பெயரை தாங்கியுள்ள பகுதிகளின் பெயர்களையும் இந்துக்களின் பெயர்களால் மாற்ற வேண்டும். அதுவரையும் எங்கள் போராட்டம் இதுபோல் அமைதியான முறையில் தொடரும்.'' எனத் தெரிவித்தார்.
இதனால், குதுப்மினார் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பால் டெல்லி போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தனர். இந்து அமைப்பினரின் சிலரைப் பிடித்து விசாரணைக்காகக் காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். இவர்களில் ஜெய் பகவான் கோயல் மீது மட்டும் வழக்குப் பதிவாகி விசாரணை தொடர்கிறது. பிறகு, கூடுதல் போலீஸாரை குதுப்மினாரின் முன் அமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இதுபோல், குதுப்மினாரில் இந்து அமைப்புகள் சர்ச்சைகளை கிளப்புவது அதிகரித்து விட்டது. குதுப் மினாரின் நுழைவு வாயிலில் 'குவ்வத்தூல் இஸ்லாம்(இஸ்லாத்தின் சக்தி)' எனும் பெயரிலான மசூதி அமைந்துள்ளது. முஸ்லிம்களால் தொழுகை தொடரும் இந்த மசூதியானது 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் டெல்லி பாஜகவின் சில தலைவர்களும் இணைந்து விட்டனர்.
மெஹரோலி நகராட்சி வார்டின் பாஜக உறுப்பினரான ஆர்த்திசிங், குதுப் மினாரினுள் இந்து கடவுள் சிலைகள் அவமதிக்கும் வகையில் தரைகளில் வைக்கப்பட்டுள்ளன எனவும், இவற்றை மாற்றி உகந்த இடத்தில் வைத்து, பூசை வழிபாட்டிற்கு அனுமதிக்கவும் வலியுறுத்தி இருந்தார்.
கடந்த டிசம்பர் 2020 இல், இந்து மடத்தீர்த்தங்கர் ரிஷப் தேவ் எனும் துறவியால், டெல்லியின் சிவில் நீதிமன்றத்தில் குதுப்மினார் மீது ஒரு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, மத்திய அரசின் 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக் காட்டி நீதிபதி நேஹா சர்மாவால் தள்ளுபடியானது.
இச்சட்டம், சுதந்திரத்திற்கு முன்பிருந்து நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் மீதான வழக்கால் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவால் இயற்றப்பட்டது. இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் சுதந்திரத்திற்கு பிறகு இருந்த நிலை தொடரும். அதில் மாற்றங்கள் செய்யவோ, பிறமதத்தினர் உரிமை கோரவோ முடியாது.
எனினும், இந்த வழக்கில் துறவி ரிஷப் தேவ், டெல்லி டெல்லி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT