Last Updated : 11 May, 2022 05:19 AM

2  

Published : 11 May 2022 05:19 AM
Last Updated : 11 May 2022 05:19 AM

மதுராவின் ஷாயி ஈத்காவிலும் களஆய்வு கோரி மனு: உ.பி.யின் முகலாயர் கால மசூதிகளுக்கு வலுக்கும் சிக்கல்

புதுடெல்லி: வாரணாசியின் கியான்வாபி மசூதியை போல், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியிலும் கள ஆய்வு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், முகலாயர்களால் கட்டப்பட்ட உத்தர பிரதேச மசூதிகளுக்கு சிக்கல் வலுப்பதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யின் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதி, அருகில் உள்ள விஸ்வநாதர் கோயிலை இடித்து அவுரங்கசீப் கட்டியதாகப் புகார் உள்ளது. இதன் மீதான வழக்கும் வாரணாசி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. அதேசமயம், கடந்த ஆகஸ்ட் 2021 -ல் இக்கோயிலின் சிங்காரக் கவுரி அம்மனின் அன்றாட தரிசனத்திற்காகவும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. கவுரி அம்மனின் சிலை, கோயிலினுள் அமைந்த மசூதியின் வெளிப்புற வளாகச் சுவரில் அமைந்துள்ளது. இதனால், இவ்வழக்கை விசாரிக்கும் வாரணாசியின் சிவில் நீதிமன்றம் மசூதியினுள் புகைப்படம், வீடியோ பதிவுகளுடன் களஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கியான்வாபியை போன்ற வழக்கு மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமிக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்காவிலும் தொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த கிருஷ்ணன் கோயிலை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்து ஈத்கா மசூதியை கட்டியதாகப் புகார் உள்ளது. இதன் மீதான வழக்குகளும் சமீப ஆண்டுகளில் மதுராவின் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளன. இச்சூழலில், அம்மனுக்களில் ஒன்றை தொடுத்த மூத்த வழக்கறிஞர் மகேந்திர பிரதாப்சிங் புதிதாக ஒரு மனு அளித்துள்ளார். இதில் அவர், ஷாயி ஈத்கா மசூதியினுள் களஆய்வு கோரி நேற்று மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதுகுறித்து தன் மனுவில் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப்சிங் குறிப்பிடுகையில், ‘கிருஷ்ண ஜென்மபூமியில் இருந்த தாகூர் கேசவ்தேவ் கோயிலை இடித்து ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. தற்போதைய கோயிலின் அருகிலுள்ள மசூதியின் 13.37 ஏக்கர் நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதற்கான வரலாறு மற்றும் தொல்லியல் சான்றுகளுக்காக மசூதியினுள் களஆய்வு நடத்தப்பட வேண்டும். இதன் அறிக்கையை பெற்று நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உ.பி.யில் இதுபோல் முகலாயர் கால மசூதிக்கானப் பிரச்சனை முதன்முதலாக அயோத்தியில் கிளம்பியது. ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் இங்கிருந்த பழம்பெரும் கோயிலை இடித்து முகலாய மன்னர் பாபரால் மசூதி கட்டியதாகப் புகார் எழுந்தது. இதன்மீது சுமார் 70 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த நவம்பர் 2019-ல் உச்ச நீதிமன்றத்தில் வெளியானது.

இந்துக்கள் சார்பிலான இந்த தீர்ப்பில் அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டு, மசூதிக்கு வேறு இடமும் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாரணாசியிலும், பிறகு மதுராவிலும் உள்ள முகலாயர் கால மசூதிகளுக்கான சிக்கல் வலுத்துள்ளது. மதுரா மசூதி தொடர்பான புதிய மனு, ஜூலை 1-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x