Published : 09 May 2022 05:11 AM
Last Updated : 09 May 2022 05:11 AM
புது டெல்லி: தென்கிழக்கு வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. இந்த புயல் அந்தமான் தலை நகர் போர்ட் பிளேரில் இருந்து 380 கி.மீ. ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. ஒடிசாவின் புரியில் இருந்து 1,030 கி.மீ. தொலைவில் நிலை கொண் டிருக்கிறது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியை புயல் நெருங்கும். அப்போது தீவிர புயலாக வலுபெறும். அங்கிருந்து மே 10-ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியை நெருங்கும். அங்கிருந்து வளைந்து திரும்பி ஒடிசா கடல் எல்லையை ஒட்டிய வடமேற்கு வங்க கடலை அடையலாம்.
அசானி புயல் காரணமாக மே10-ம் தேதி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். பலத்த காற்று வீசக் கூடும். மே 11-ம் தேதி ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். மே 12-ம் தேதி ஒடிசா, மேற்குவங்கத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
7.5 லட்சம் பேர் வெளியேற்றம்
அசானி புயல், ஆந்திரா, ஒடிசாவில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த மாநிலங்களின் கடல் பகுதியை ஒட்டி செல்லும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலால் ஒடிசா மற்றும் தென்மேற்கு வங்கத்தில்அதிக பாதிப்புகள் ஏற்படக் கூடும்.குறிப்பாக ஒடிசாவில் 125 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஒடிசாவில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாநில அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதேபோல மேற்குவங்கம், ஆந்திராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. அசானி புயல் காரணமாக பிஹார், ஜார்க்கண்ட், அசாம், சிக்கிம் மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அந்தந்த மாநில வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
அசானி பெயர் சூட்டிய இலங்கை
உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது. இதன்படி அரபி கடல், வங்க கடல் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஒமன், பாகிஸ்தான், தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பெயர் சூட்டி வருகின்றன.
அந்த வரிசையில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு இலங்கை சார்பில் அசானி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது சிங்கள மொழி சொல் ஆகும். அசானி என்றால் சினம் அல்லது கடும் கோபம் என்று அர்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT