Published : 02 May 2016 08:44 AM
Last Updated : 02 May 2016 08:44 AM

ரஷ்யாவில் தூக்கிலிடப்பட்டாரா நேதாஜி?- புயலைக் கிளப்பும் புதிய ஆவணங்கள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய புதிரின் முடிச்சுகள் அவிழாத நிலையில் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் புதிய புயலைக் கிளப்பியிருக்கின்றன. அந்த ஆவணங்களில் ‘நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை; அவர் நேரு பிரதமராக இருந்தபோது ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்' என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் புலனாய்வாளரும் நேதாஜி பசும்பொன் திருமகனார் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவருமான வரதராஜ்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில் அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இதனால், மத்திய அரசு கடந்த ஜனவரி 23-ம் தேதி நேதாஜியின் 119-வது பிறந்தநாள் அன்று நேதாஜி தொடர்பான 100 ஆவணங்களையும், மார்ச் மாதம் 50 ஆவணங்களையும், 25 ஆவணங்களையும் வெளியிட்டது. இவை 1956-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலானவை. இவை அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையத்திலும் இந்த ஆவணங்களை பார்க்க முடியும். இந்த ஆவணங்களை ஆய்வு செய்து, ‘நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது நேதாஜி ரஷ்யாவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்’ என்கிறார் வரதராஜ்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

விமான விபத்து ஒரு நாடகம்

இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி ஜப்பானில் இருந்தார். பிரிட்டன் சார்பாக போரிட்ட இந்திய வீரர்களை ஜப்பான் அப்போது கைது செய்திருந் தது. ‘எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்’ என்ற அடிப்படையில் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்துக்கு அந்த வீரர்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அந்த வீரர்களை ஜப்பான் விடுதலை செய்தது. அவர்களையும் தென் தமிழகத்தில் இருந்து பசும் பொன் முத்துராமலிங்க தேவரால் அனுப்பப்பட்ட 5,000 இளைஞர்களையும் கொண்டு ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது.

அதேசமயம் 1945 ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக ஜப்பானின் டோக்கியோ ரேடியோ அறிவித்தது. அது உண்மை யில்லை என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது. உண்மையில், விமான விபத்து ஜப்பானிய அரசும் நேதாஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த விபத்தில் நேதாஜியின் உதவியாளரான ரஹ்மான் மட்டும் உயிர் பிழைப்பதுபோல காட்டி, அவரது வாக்குமூலம் மூலம் நேதாஜி உயிரிழந்துவிட்டார் என்று வெளியுலகுக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே நேதாஜி ரஷ்யாவுக்குள் தப்பிச் சென்றார். நேச நாட்டு படையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நேதாஜி இதை செய்தார்.

நேதாஜி போர்க் குற்றவாளியா?

இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலம் இதுதான்:

“1945 டிசம்பர் 26 அல்லது 27 அன்று பிரதமர் நேரு என்னிடம் பிரிட்டன் பிரதமராக இருந்த கிளமென்ட் அட்லிக்கு அனுப்புவதற்காக 2 கடிதங்களை தட்டச்சு செய்ய சொன்னார்.

ஒரு கடிதத்தில், ‘நேதாஜி சைகானில் இருந்து மஞ்சூரியாவின் தைரன் பகுதிக்கு 1945 ஆகஸ்ட் 23-ம் தேதி ஜப்பானின் போர் விமானத்தில் வந்திறங்கினார். அதில் ஏராளமான தங்கக் கட்டிகளும் நகைகளும் இருந்தன. இறங்கியவுடன், அவருக்கு வழங்கப்பட்ட தேநீர், வாழைப் பழங் களை சாப்பிட்டார். அங்கு 4 பேர் ஒரு ஜீப்பில் வந்தனர். அவர்களில் ஒருவர் ஜப்பானிய ராணுவ ஜெனரல் ஷெடேய். அந்த ஜீப் அவர்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவின் எல்லையை நோக்கிச் சென்றது. 3 மணி நேரம் கழித்து அவர்களை விட்டுவிட்டு ஜீப் திரும்பிய பின்பு அந்த விமானம் டோக்கியோவுக்கு கிளம்பிச் சென்றது’ என்று தட்டச்சு செய்தேன்.

மற்றொரு கடிதத்தில், “எனக்கு கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் உங்களது போர்க் குற்றவாளியான சுபாஷ் சந்திர போஸ் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் ஆதரவுடன் ரஷ்யாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட் டனுக்கு நட்பு நாடாக இருக்கும் ரஷ்யா இதை செய்திருக்கக் கூடாது. இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கவும்’’ என்று தட்டச்சு செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்த தகவலும் தற்போது வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருக்கிறது.

நேதாஜியை சந்தித்த தூதர்கள்

மேற்கு வங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.எம்.கோஸ்வாமியும் கோஸ்லா கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர், “ரஷ்யாவுக்கான இந்திய தூதராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) 1948-ம் ஆண்டு மாஸ்கோவில் நேதாஜியை பார்த்தார். அப்போது அவரிடம் நேதாஜி தன்னை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தார். இதனை மேலிடத்தில் ராதாகிருஷ்ணன் தெரிவித்தும் பலன் இல்லை. இந்த விஷயங்களை 1954-ல் ராதாகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அதன் பின்பு ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்ட நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டும் மாஸ்கோவில் நேதாஜியை சந்தித்துள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் ஒரு கூட்டத்தில், ‘நான் ஒரு தகவலை வெளியிட்டால் இந்தியாவே அதிரும்’ என்று பேசத் தொடங்கினார். ஆனால், மேற்கொண்டு அவர் பேசவில்லை” என்று கமிஷனில் கோஸ்வாமி கூறியிருக்கிறார்.

நேதாஜியை ஒப்படைக்க ஒப்புதல்

நேதாஜியின் மெய்க்காப்பாளரான உஸ்மான் படேல் என்பவர் கோஸ்லா கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், “இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட சமயத்தில் நேதாஜி இந்தியாவுக்குள் நுழைந்தால் அவரை பிரிட்டனிடம் ஒப்படைப்பதாக நேரு, முகம்மது அலி ஜின்னா, மவுலானா ஆசாத் ஆகியோர் பிரிட்டன் நீதிபதி முன்னிலையில் ஒரு சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். இதை பின்பொரு சமயம் மவுலானா ஆசாத் வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்தார். 1945 அக்டோபர் 13-ம் தேதி நான் 21,600 சிங்கப்பூர் டாலர்களுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்டேன். அந்த தொகை இந்திய தேசிய ராணுவத்துக்கு மளிகை, உணவுப் பொருள் வாங்குவதற்காக நேதாஜி என்னிடம் கொடுத்தது. ஆனால், அது ரப்பர் வியாபாரத்துக்காக நான் கொண்டு வந்ததாக பொய்யாக புகார் பதிவு செய்யப்பட்டது” என்று கமிஷனில் கூறியிருக்கிறார்.

இந்த வாக்குமூலங்கள் பற்றிய ஆவணங்கள் இல்லை. ஆனால், இவை அன்றைய ஆங்கில நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வரதராஜ் கூறினார்.

இவை தவிர நேதாஜி தொடர்பான சுமார் 45 ரகசிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன அல்லது காணமால் போயின என்ற தகவலும் தற்போது வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது. அதன் பின்பு நேதாஜி என்ன ஆனார் என்பதற்கான ஆவணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஜப்பானில் இருப்பது யாருடைய அஸ்தி?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள புத்தர் கோயிலில் நேதாஜியின் அஸ்தி கலசம் என்பதாக சொல்லி ஒன்றை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசு பராமரிப்பு செலவையும் அனுப்பி வருகிறது. தற்போது விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்ற தகவல்கள், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவரும்போது, ஜப்பானில் இருக்கும் அஸ்தி யாருடையது என்ற கேள்வி எழுகிறது. நேதாஜியின் மகள் அனிதா போஸ் மரபணுக்களை வைத்து அந்த அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் ஒருவேளை அதற்கான விடை கிடைக்கக்கூடும்.

தற்போது நேதாஜி தொடர்பான 62 ரகசிய ஆவணங்கள் இங்கிலாந்திலும், 5 ரகசிய ஆவணங்கள் ஜப்பானிலும் இருக்கின்றன. ஜப்பான் விரைவில் 2 ஆவணங்களை வெளியிடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நேதாஜியின் அனைத்து ஆவ ணங்களையும் வெளியிட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது இன்னும் ஏராளமான உண்மைகள் வெளியே வரக்கூடும். அது இதுவரை வெளிவராத இந்தியாவின் இன்னொரு வரலாறாகவும் இருக்கலாம்!

சுப்பிரமணியன் சுவாமி கூறிய தகவல்

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்த பேட்டி ஒன்றில், “நம்மிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் ‘விமான விபத்தில் நேதாஜி மரணம்’ என்பது பொய்யானது என்று தெரியவருகிறது. அவர் அப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சீனாவின் மஞ்சூரியா பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை ரஷ்ய அதிபரான ஸ்டாலின் சிறையில் அடைத்தார். பின்பு 1953 வாக்கில் நேதாஜி தூக்கிலிடப்பட்டு இறந்தார்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x