Published : 07 May 2022 09:12 AM
Last Updated : 07 May 2022 09:12 AM
மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலைகாரர்களுக்கு தாங்கள் ஒருபோதும் துணைபோவதில்லை என்றும் அந்த நபரின் செயல் இஸ்லாமிய சட்டப்படி மிக மோசமான கிரிமினல் குற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓவைசி கண்டனம்: இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய ஓவைசி, "சூரூர் நகர் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்தப் பெண் விருப்பப்பட்டு நாகராஜுவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் தலையிட பெண்ணின் சகோதரருக்கு உரிமையில்லை. பெண்ணின் கணவரை அவர் கொலை செய்தது அரசியல் சாசனப்படி கிரிமினல் குற்றம் என்றால் இஸ்லாமிய சட்டத்தின்படி மிக மோசமான கிரிமினல் குற்றமாகும். குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனாலும், சம்பவத்திற்கு வேறு நிறத்தை சிலர் பூசுகின்றனர். கொலைகாரர்களுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
மேலும், டெல்லி ஜஹாங்கிர்புரியில், மகாராஷ்டிராவின் கார்கோனில் நடந்த வன்முறை குறித்து பேசிய ஒவைசி, "எந்தவொரு மத ஊர்வலம் நடந்தாலும் உயர் தர சிசிடிவியை அப்பகுதியில் குறிப்பாக வழியில் உள்ள மசூதியில் பொறுத்த வேண்டும். ஊர்வலங்களை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். அப்போதுதான் கல் எறிபவர்கள் யார் என்ற உண்மை தெரியவரும்" என்றார்.
சம்பவப் பின்னணி: ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. இவரும் பக்கத்து கிராமமான கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே நாகராஜுவுக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேன் பணி கிடைத்தது. திருமணம் செய்துக்கொண்ட பின்னர், இருவரும் விசாகப்பட்டினம் சென்று 2 மாதம் வசித்தனர். பிரச்சினை ஏதும் ஏற்படாததால், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் குடியேறினர். இதையறிந்த சுல்தானாவின் சகோதரர் சையத் மோபின் அகமது மற்றும் அவரது நண்பர் மசூத் அகமது ஆகிய இருவரும் கடந்த புதன் கிழமையன்று, சூரூர்நகர் பகுதியில் சுல்தானாவையும், அவரது கணவரையும், பைக்கில் வந்து வழிமறித்தனர்.
பின்னர், நாகராஜுவை இரும்பு கம்பியால் தாக்கினர். தடுக்க வந்த சுல்தானாவை கீழே தள்ளிவிட்டனர். நாகராஜு படுகாயங்களுடன் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT