Published : 04 May 2022 06:55 AM
Last Updated : 04 May 2022 06:55 AM

உலக அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரிப்பு: பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தீபக் வோரா கருத்து

குவாஹாட்டி: உலக அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்று பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தீபக் வோரா உறுதிபடத் தெரிவித்தார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ராயல் சர்வதேச பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் சரத் மஹந்தா 7-வது நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தீபக் வோரா பேசியதாவது:

உலக அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. உலகின் முக்கியமான தேவைகளை தீர்க்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், பருவநிலை மாற்றம், பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி வருகிறது. இன்றைய சூழலில் இவைதான் மனித குலத்தின் முன் உள்ள பெரும் சவாலாகும்.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலக அரங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது கடந்த 100 ஆண்டுகளில்தான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன கனவு தற்போது ஒன்றுமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பங்குதார நாடாக இருந்த சீனா, இப்போது அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிற நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளும் இதை உணர்ந்து தற்போது விழித்துக் கொண்டுள்ளன. தங்களை இந்தியாதான் மீட்டெடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு உணவுப்பொருள் தேவைக்காக பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய சூழலில் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தபோது, நாட்டின் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலையையும் எதிர்கொண்டது. இவையெல்லாம் இந்தியா எதிர்கொண்ட மிக மோசமான காலகட்டமாகும்.

கரோனா பெருந்தொற்று பரவலின்போது இந்தியாவும் கலங்கித்தான்போனது. ஆனால் அதை வெகுநேர்த்தியாக சமாளித்து அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளோம். மேலும் சுகாதார கட்டமைப்பில் ஹைபர் பவர் சக்தியாக இந்தியா வளர்ந்துள்ளது.

இந்தியா முன்னேறுகிறது

அனைத்துவிதமான சவாலையும் சமாளித்து நிர்ணயித்த இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைக் கண்டு உலகமே வியந்து பாராட்டுகிறது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி அளிப்பது மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றில் நிர்ணயித்த இலக்கை இந்தியா எட்டி வருகிறது.

உலகிலேயே மிக நீண்ட தொலைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணியை நிறைவேற்றியதோடு, விரைவிலேயே அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணியையும் நிறைவேற்ற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்விழாவில் அசாம் மாநில பேரவைத் தலைவர் பிஸ்வஜித் டைமரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x