Published : 04 May 2022 07:47 AM
Last Updated : 04 May 2022 07:47 AM
புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மதுபான விடுதியில் நடைபெற்ற இரவு விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் சும்னிமா உதாஸ். இவர் சிஎன்என் தொலைக்காட்சியின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டில் நிர்பயா வழக்கு, கடந்த 2014-ம் ஆண்டில் மலேசிய விமானம் மாயமானது உட்பட பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து செய்தி சேகரித்துள்ளார். பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சும்னியா உதாஸும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சும்னிமா உதாஸுக்கும் நீமா மார்ட்டின் ஷெர்பாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
சீன தூதருடன் ராகுல்?
இந்த திருமணத்தில் பங்கேற்க 5 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் காத்மாண்டு சென்றார். அவரோடு 2 பேர் சென்றுள்ளனர். சும்னிமா உதாஸின் திருமணத்தை ஒட்டி காத்மாண்டின் புகழ்பெற்ற எல்ஓடி என்ற மதுபான விடுதியில் இரவு விருந்து நடைபெற்றிருக்கிறது. இதில் ராகுல் காந்தி பங்கேற்றிருக்கிறார்.
இதுதொடர்பாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. ஒரு வீடியோவில் மது அருந்தும் பெண்ணுக்கு அருகில் ராகுல் இருக்கிறார். அந்த பெண் நேபாளத்துக்கான சீன தூதர் ஹோ யாங்கி என்று கூறப்படுகிறது. மற்றொரு வீடியோவில் ராகுல் தனது செல்போனில் ஏதோ பார்த்துகொண்டிருக்கிறார். இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாஜக விமர்சனம்
பாஜக தலைவர்கள் பலரும் இந்த வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, "ராகுல் காந்தி முழுநேர சுற்றுலா பயணி, பகுதிநேர அரசியல்வாதி. அவரது பயணம் முடிந்து நேரம் கிடைக்கும்போது இந்திய மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, "விருந்து, சுற்றுலா, கேளிக்கை கொண்டாட்டம் என சுகபோகமாக ராகுல் காந்தி வாழ்கிறார்" என்று கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறும்போது, "மும்பை தாக்குதலின்போது ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றிருந்தார். தற்போது அவரது கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இப்போதும் அவர் இரவு விருந்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் பதில்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, "பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அழையாவிருந்தாளியாக பங்கேற்றார். ராகுல் காந்தி அப்படி கிடையாது. நண்பரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். திருமணத்தில் பங்கேற்பது ஒரு குற்றமா" என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, "எல்லோருமே விழா, விருந்துகளில் பங்கேற்கின் றனர். ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்றதில் என்ன தவறு" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT