Published : 03 May 2022 03:43 AM
Last Updated : 03 May 2022 03:43 AM
புதுடெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று சில மாநில அரசுகள் பிறப்பித்திருக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2ஆண்டுகளாக உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில், பொதுமக்களுக்கு 2 தவணைகளாக தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மக்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், சமீபகாலமாக நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், 4-வது அலை பரவக் கூடுமோ என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி உள்ளன. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 189 கோடி டோஸ்களுக்கும்மேல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக் களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது.
ஏற்கெனவே, தடுப்பூசியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ‘எந்த தனிநபருக்கும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயமாக தடுப்பூசி செலுத்துமாறு மத்திய அரசு கூறவில்லை. மக்கள் நலன் கருதி கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மட்டுமே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.
இதனிடையே, சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டன. தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக அரசாணைகளும் வெளியிடப் பட்டுள்ளன.
தடுப்பூசி கட்டாயம் என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, ‘‘தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்பதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்பதும் மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்ததாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களால் கரோனா பரவுவதாக நிரூபிக்கும் எந்த தகவலையும் அரசுகள் வெளியிடவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி இல்லை என்று சில மாநில அரசுகள் பிறப்பித்திருக்கும் உத்தரவு ஒருதலைபட்சமானது. அந்த உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது, அரசியல் சாசனப் பிரிவு 21-ன்கீழ் சட்ட விரோதமானது. அதேநேரம், பொது சுகாதாரத்தை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கவும் கொள்கை முடிவுகளை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்து வது கூடாது.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதாவது எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டிருந் தால், அதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். சிறார்களுக்கான தடுப்பூசிகளை பொறுத்தவரை நிபுணர்களின் அறி வுரையின்படி, சர்வதேச அளவில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
3,157 பேருக்கு தொற்று
இதனிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,157 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,157 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 82,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயி ரிழந்துள்ளனர். கரோனாவால் இது வரை 5 லட்சத்து 23,869 பேர் இறந்துள்ளனர். தற்போது நாடுமுழுவதும் 19,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,723 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 38,976 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT