Published : 03 May 2022 12:05 AM
Last Updated : 03 May 2022 12:05 AM

போரில் யாரும் வெற்றி பெற முடியாது; இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது - ஜெர்மனியில் பிரதமர் மோடி கருத்து

பெர்லின்: போரினால் உக்ரைன் மக்கள் மீதான மனிதாபிமான தாக்கம் தவிர, எண்ணெய் விலை, உலகளாவிய உணவு விநியோகம் மீது ஏற்பட்டுள்ள அழுத்தம், உலகின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் அந்நாட்டு பிரதமர் ஓலஃப் ஷோல்ஸூடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இருநாட்டு தலைவர்களும் ஒரு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது: "உக்ரைன் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே போரை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைகளை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் வெற்றியாளர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் இழப்பையே சந்திப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அமைதியின் பக்கம் நிற்கிறோம்.

உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ளது. உணவு தானியங்கள் மற்றும் உரங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுமையை சந்திக்கிறது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷோல்ஸ், "உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதன் மூலமாக ஐ நா சாசனத்தை ரஷ்யா மீறியுள்ளது" என்றார். தொடர்ந்து ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் மூன்று நாள் ஐரோப்பிய நாடுகள் பயணத்தில் முதலாவதாக திங்கள்கிழமை அன்று அவர் ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அந்நாட்டு பிரதமர் ஓலஃப் ஷோல்ஸூடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்தினார். அப்போது அவர்கள் வர்த்தகம் மற்றும் கலாச்சர இணைப்புக்கு உத்வேகம் அளிப்பது உள்ளிட்ட முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x