Published : 02 May 2022 09:46 PM
Last Updated : 02 May 2022 09:46 PM

வெப்ப அலை | இந்தியாவில் 5 ஆண்டுகளில் 1,743 பேர் மரணம்: உலக வானிலை ஆய்வு நிறுவன தரவுகளும் எச்சரிக்கையும்

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தக் கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக 200 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் கடந்த மாதம் பதிவு ஆனதாக இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையிலே வெப்பம் இந்த அளவு பதிவாகி உள்ளதால், வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவின் பெயரை உலக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்ட வருகிறது. இந்தியா அதிகரித்து வரும் வெப்பம் தொடர்பாக தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருகிறது உலக வானிலை ஆய்வு நிறுவனம். இதன்படி, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் வெப்ப அலை காரணமாக 1,743 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலக வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது என்ன?

— World Meteorological Organization (@WMO) April 29, 2022

2 நாடுகள்

வெப்ப அலை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். இந்தியாவில் 43 - 46 செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இதே நிலைமைதான் பாகிஸ்தானிலும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், காலநிலை மாற்றம் ஆகும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.

25 ஆயிரம் பேர்

இந்தியாவில் வெப்ப அலை காரணமாக இதுவரை 25 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 1992 முதல் 2020 வரை இந்தியாவில் 25,692 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2011 முதல் 2015 வரை 6,973 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலை காரணமாக 1,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 2019-ம் ஆண்டு 226 பேரும், 2020-ம் ஆண்டு 4 பேரும், 2021-ம் ஆண்டு 4 பேரும் மரணம் அடைந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம்

இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2016 உள்ளது. 1901-க்குப் பிறகு 2016-ம் ஆண்டுதான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. இதைத் தவிர்த்து 2017, 2021, 2019, 2020 ஆகிய ஆண்டுகள் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக உள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளாக அதிக அளவு வெப்பம் பதிவாகி வருவது தெரியவருகிறது.

செயல் திட்டம்

வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை, இந்தியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு நகரத்திற்கு இதுபோன்ற செயல் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவு வெப்ப அலையால் பாதிக்கப்படும் 23 மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இதுபோன்ற வெப்ப அலைகளின் தாக்கத்தை தடுக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x