Published : 02 May 2022 01:50 PM
Last Updated : 02 May 2022 01:50 PM
பாட்னா: பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை மீண்டும் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் இணையக்கூடும் எனத் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸில் இணையவில்லை
கட்சியில் இணைவது பற்றி மட்டுமின்றி காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பாகவும் அவர் கட்சித் தலைமைக்கு பரிந்துரை அறிக்கையை அளித்தார். பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் சோனியா காந்தி அமைத்தார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மிஷன் 2024 திட்டத்தையும் அவர் முன் வைத்தார். இதுபற்றி அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோரும் தெரிவித்தார்.
பிஹாரில் புதிய கட்சி?
காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்தத நிலையில் பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக மறைமுகமாக கருத்து தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் "ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராகவும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. நான் பக்கத்தைத் திருப்பும்போது மக்கள் நல்லாட்சிக்கான பிரச்சினைகளையும் பாதையையும் நன்கு புரிந்துகொள்வதற்கு உண்மையான மாஸ்டர்கள், மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது. பிஹாரில் இருந்து தொடங்குகிறது. முன்பு செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து புதிய பக்கத்தைத் திருப்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
திட்டம் என்ன?
இதுகுறித்து பிரசாந்த் கிஷோரின் நெருங்கிய வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
பிஹாரில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான ஆய்வு தொடங்கிவிட்டது. காந்திஜி தனது அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களை உடனடியாக முன்வைக்காதது போல், அவர் தனது கருத்துகளுக்கு வடிவம் கொடுப்பதற்கு முன்பு அவர்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காக அவர் பயணம் செய்து மக்களிடையே சென்றார், அதே போல் பிரசாந்த் கிஷோரும் செய்வார்.
நிச்சயமாக, தேர்தல் அரசியலுக்குச் செல்வதுதான் யோசனை, ஆனால் குஜராத் மாதிரி அல்லது கேஜ்ரிவால் மாதிரி அல்லது இது அல்லது அது போன்ற எந்த மாதிரியின் அடிப்படையிலும் அல்ல. ஆனால் நல்லாட்சி யோசனைகளின் அடிப்படையில். ஆரம்பம் பீகாரில் இருந்து இருக்க வேண்டும். இது பீகாரில் மட்டும் அல்ல என்பது தெளிவாகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் வியூகத்தை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபடப் போவதாக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT