Published : 02 May 2022 11:12 AM
Last Updated : 02 May 2022 11:12 AM
லக்னோ: மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 60,200 ஒலிப்பெருக்கிகளை எந்த ஒலியளவில் இயக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் இருந்து இதுவரை 53,942 ஒலிப்பெருக்கிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும், 60,200 ஒலிப்பெருக்கிகளின் ஓசையளவைக் குறைத்துக் கட்டுப்படுத்தியுள்ளோம். பெரேலி பகுதியில் மட்டும் 16,682 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மேலும் 17,204 ஒலிப்பெருக்கிகளின் ஓசை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாரணாசி காவல் ஆணையரக சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 230 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டு, 313 ஒலிப்பெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் ஒலியளவைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதேபோல், எந்த ஒரு மத ஊர்வலமும் முன் அனுமதியின்றி நடத்தக் கூடாது என்றும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
ராம்நவமி ஊர்வலத்தை ஒட்டி ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்த பின்னரே, மத ஊர்வலங்களுக்கான கட்டுப்பாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT