Published : 02 May 2022 09:50 AM
Last Updated : 02 May 2022 09:50 AM
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்தார். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்துபோலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேரும் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒன்றின்பின் ஒருவராக மயங்கிவிழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தேவநந்தா உயிரிழக்க 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. அதை சமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா எனப்படுவது ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு. இந்த உணவு பொதுவாகவே பதின்பருவ குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. க்ரில் ஷவர்மா, ப்ளேட் ஷவர்மா என்றெல்லாம் இந்த உணவு விற்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த க்ரில்கள் திறந்த வெளியில் தான் இருக்கின்றன. அதுவும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் சாலையில் இருந்து எழும் தூசிகளுக்கு மத்தியில் இந்த வகை உணவு சாதாரணமாகவே கிருமிகளைக் கொண்டிருக்கும் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், துரித உணவுகளில் பயன்படுத்தும் இறைச்சியின் தரமும், அவை சுத்தப்படுத்தப்படும் முறையும், எத்தனை டிகிரியில் வேகவைக்கப்படுகிறது என்ற அளவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விஷயம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT