Published : 01 May 2022 04:26 PM
Last Updated : 01 May 2022 04:26 PM
புதுடெல்லி: திங்கள்கிழமை முதல் டெல்லி மற்றும் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 - 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் பரவலாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. சில இடங்களில் வெப்ப அலை வீசிய வருகிறது.
கடந்த மழைகாலத்தில் போதிய மழை பெய்த நிலையில் தற்போதைய கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பமான ஏப்ரல் மாதமாக இருந்தது.
சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை முறையே 35.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 37.78 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. டெல்லியில் வெப்பநிலை 43.5 டிகிரியாக பதிவாகியுள்ளது. வடமேற்குப் பகுதியில் இதற்கு முன்பு ஏப்ரல் 2010 இல் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது, அதே சமயம் மத்திய பிராந்தியத்தில் 1973 இல் 37.75 டிகிரி செல்சியஸாக இருந்தது.
இந்தநிலையில் திங்கள்கிழமை முதல் டெல்லி மற்றும் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
மே 01 முதல் 03 வரை விதர்பாவின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும், மே 01 & 02 ஆகிய தேதிகளில் சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வெப்பஅலை வீசும். அதன் பிறகு அப்பகுதியில் வெப்ப அலை தணியும்.
டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா- சண்டிகர், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மே 3 முதல் வெப்ப அலை குறையும்.
இவ்வாறு ஐஎம்டி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT