Published : 01 May 2022 12:33 PM
Last Updated : 01 May 2022 12:33 PM
கர்நாடக, உத்தரப் பிரதேச மாநிலங்களில் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் போர்க் கொடி தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு கிராமம் இந்து - முஸ்லிம் உறவுக்கு உதாரணமாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜால்னா மாவட்டத்தில் உள்ளது தாஸ்லா பிர்வாடி கிராமம். இங்கு மசூதிகளில் ஒலிக்கும் பாங்கு எக்காரணம் கொண்டும் எடுக்கப்படாது என்று உறுதி மொழியேற்றுள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 2,500 குடும்பங்கள் உ ள்ளனர். இதில் 600 முஸ்லிம் குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தாஸ்லா பிர்வாடி கிராம பஞ்சாயித்து கூடியது. அந்தக் கூட்டத்தில் அனைத்து மக்களும் கிராமத்திலுள்ள மசூதிகளின் ஒலிக்கும் பாங்கு அகற்றப்படாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுகுறித்து கிராம தலைவர் ராம் பாட்டீல் ஒருவர் கூறும்போது, “ கிராமத்தில் எல்லா சமூகத்தையும் சேர்ந்தவர்களளும் உள்ளனர். இங்கு சுமார் 600 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பல ஆண்டுகளாக அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறோம், நாடு முழுவதும் எந்த அரசியல் விளையாடினாலும், அது எங்கள் உறவுகள் மற்றும் பாரம்பரியங்களை பாதிக்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
மசூதிகளில் பாங்கு ஓதுவது இங்குள்ள வாழ்வியல் முறை. அதன்படியே இங்குள்ள மக்கள் வேலை செய்கிறார்கள். காலை பாங்கு ஒலித்தவுடனே மக்கள் வேலையை தொடங்குகின்றனர். மதியம் பாங்கு ஒலித்தவுடன் உணவு உண்ணுகின்றனர். மாலை பாங்கு ஒலித்தவுடன் மக்கள் தங்கள் வேலையை முடித்து கொள்கின்றனர். 7 மணிக்கு ஒலிக்கும் பாங்குக்கு பிறகு இரவு உணவுக்கு தயாராவார்கள். 8.30 மணிக்கு பிறகு ஒலிக்கும் பாங்குக்கு பிறகு மக்கள் தூங்க செல்வார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ராம் பாட்டீல் பேசும்போது, “ இங்கு ஜாதி அல்லது மத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் எப்போதும் பங்கேற்பார்கள். மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாதேவ் கோயிலில் காவிக்கொடியை ஏற்றுமாறு கிராம மக்கள் ஒரு முஸ்லிம் இளைஞரிடம் கேட்டுக் கொண்டனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT