Published : 01 May 2022 04:54 AM
Last Updated : 01 May 2022 04:54 AM
மும்பை: கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கை குறித்து பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் பணம் மற்றும் நிதி நிலைகுறித்த அறிக்கையை (2021-22)ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. ஆனால் 2021-22 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 2-வது அலையால்பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. அதேபோல 3-வது அலை ஜன.2022-ல் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது ரஷ்யா - உக்ரைன்போர் காரணமாக சர்வதேச அளவிலான வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு உள்நாட்டு வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளானது. 2012-13-ம் நிதி ஆண்டு முதல் 2019-20-ம் நிதி ஆண்டில் தேக்க நிலை ஆண்டைத் தவிர இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருந்தது. இதில் 2012-13 முதல் 2016-17-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது.
2020-21-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது. 2021-22-ம் நிதிஆண்டில் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகவும், 2022-23-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. 2034-35-ம் நிதி ஆண்டில்தான் இந்தியா பழைய வளர்ச்சியை எட்டும்.
2020-21-ம் நிதி ஆண்டில் ரூ. 19.1 லட்சம் கோடியும், 2021-22-ம்நிதி ஆண்டில் ரூ. 17.1 லட்சம் கோடியும், 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ. 16.4லட்சம் கோடியும் என ரூ.52 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மற்றும் கருத்துகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வு (டிஇபிஆர்) பிரிவு தயாரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கருத்துகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
கரோனாவிலிருந்து பொருளாதாரத்தை மீட்க எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் ஸ்திரமானவளர்ச்சியை எட்டுவதற்கு வழிவகை செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT