Published : 29 Apr 2022 06:50 PM
Last Updated : 29 Apr 2022 06:50 PM
புதுடெல்லி: மே மாதம் தொடக்கத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த பிரப்ரவரி மாதம் முதலே நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. நாடு முழுவதும் கோடை வெப்பம் தீவிரமாகியுள்ளது. பல இடங்களில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 - 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி உள்ளது. இந்தநிலையில் அடுத்த மூன்று நாட்களில் நாட்டில் பரவலாக வெப்பநிலை உயரும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளதாவது:
மத்திய மற்றும் வட இந்தியாவில் 46 டிகிரி செல்சியஸ் (115 டிகிரி பாரன்ஹீட்) அடைந்துள்ளன. இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரும். டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா ,ஜார்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும். பொதுவாக குளிர்ச்சியான மழை பெய்யும் பருவமழைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதுவரை கடுமையான கோடையே நீடிக்கும்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்பதால் மாநிலங்களுடனும், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைப் பிரிவினருடனும் இணைந்து செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் சுகாதார நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை செயல்படுத்த கோரியுள்ளோம்.
இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதேசமயம் அருணாச்சல பிரதேசத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அசாம் மற்றும் மேகாலயாவிலும், நாளை முதல் மே 2-ம் தேதிக்குள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT