Published : 29 Apr 2022 03:22 PM
Last Updated : 29 Apr 2022 03:22 PM
லக்னோ: தனது முதல்வர் கனவை நிறைவேற்ற கொள்ள முடியாதவர்களால் மற்றவர்களை எப்படி பிரதமர் பதவியில் அமர வைக்க முடியும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கிண்டல் செய்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றவர்களால் எப்படி இதுபோன்று பேசவும், எண்ணவும் முடிகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராக வேண்டும் என கனவு கண்டார். ஆனால் நடந்து முடிந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனது முதல்வர் கனவைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. உத்தரபிரதேச முதல்வராக வேண்டும் என்ற அகிலேஷ் யாதவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் வாக்குகளைப் பெற்று, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகும் உத்தரப் பிரதேச முதல்வராகும் தனது சொந்த கனவை சமாஜ்வாதி கட்சித் தலைவரால் நிறைவேற்ற முடியாத நிலையில், பிரதமராக வேண்டும் என்ற வேறொருவரின் ஆசையை எப்படி நிறைவேற்ற முடியும்?
தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் ஓபிசிகள் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்தால் உ.பி.யில் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைத்திருப்போம். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்னை உ.பி. முதல்வராகவோ அல்லது நாட்டின் பிரதமராகவோ ஆக்க முடியும். அவர்களை வேறு கட்சிகளுக்கு ஆதரவு தராமல் பிஎஸ்பிதான் தங்களின் நலம் விரும்பி என்பதை உணர வேண்டும்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த பிறகும் கடந்த பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் ஐந்து இடங்களில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. பிறகு அவரால் தன்னை எப்படி பிரதமராக்கிக் கொள்ள முடியும். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பேசுவதை சமாஜ்வாதி கட்சியினர் நிறுத்த வேண்டும்
எதிர்காலத்தில் முதல்வராக வந்தாலும், பிரதமரானாலும், நலிவடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் நலன் தான் எனக்கு முக்கியம். அதனால் தான் குடியரசுத் தலைவராக ஒருபோதும் பதவி வகிக்க மாட்டேன் என்று கூறுகிறேன். முதல்வர், பிரதமர் போன்ற பதவியில் இருந்தால் தான் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019ம்- ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது இந்த கூட்டடணி வென்றால் மாயாவதியை பிரதமராக்குவதாக அகிலஷ் அப்போது அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT