Published : 29 Apr 2022 06:11 AM
Last Updated : 29 Apr 2022 06:11 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நாட்டின் பழமையான மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) மஹிளா மஹாவித்தியாலயா எனும் மகளிர் கல்லூரியும் செயல்படுகிறது. இதன் சார்பில் நேற்று முன்தினம் மாலை முஸ்லிம்களுக்கான ரம்ஜான் நோன்பு முடிக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முஸ்லிம் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து முக்கிய விருந்தினராக பிஎச்யூ துணைவேந்தர் பேராசிரியர் சுதிர் குமார் ஜெயினும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தி படங்களுடன் சமூக வலைதளங்களில் அன்று இரவே வெளியானது.
இதையடுத்து, பிஎச்யூ மாணவர்கள் அதன் நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர். ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏபிவிபி) சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் துணை வேந்தர் சுதிர் குமாரின் கொடும் பாவி எரிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “இதுபோல் இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை வேந்தர், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலை.களுக்கு சென்றிருக்க வேண்டும். இங்கு இந்துக்களுக்கு எதிராக இப்தார் நிகழ்ச்சியை புதிய வழக்கமாகத் தொடங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது” என்றனர்.
இதுகுறித்து பிஎச்யூவின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் சிங் கூறும்போது, “பல காலமாக இப்தார் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்தான். 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.
எனினும், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வரும் மாணவர்களை கட்டுப்படுத்த, மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் பகத்சிங் மாணவர்கள் அமைப்பின் சார்பில் நேற்று மாலையில், வளாகத்தினுள் இருக்கும் துணைவேந்தர் குடியிருப்பின் முன்பு ஹனுமன் மந்திரம் ஓதும் போராட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT