Published : 13 May 2016 08:17 AM
Last Updated : 13 May 2016 08:17 AM
மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட ஓட்டுப் பதிவுகள் முடிந்திருக்கின்றன. தமிழகத்தைப்போலவே வரும் 19-ம் தேதி தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மேற்கு வங்க மக்கள். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோ.பாலச்சந்திரன், அங்கு கூடுதல் தலைமைச் செய லாளர், மாவட்ட ஆட்சியர் பதவி உட்பட பல்வேறு உயர் பொறுப்பு களை வகித்தவர். அவர் அன்றைய காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் சுவாரஸ்யங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டார்.
“1987-ல் மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்ட ஆட்சியராக இருந் தேன். இதே மே மாதம்தான். அப்போது சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட் டது. ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸும்தான் பிரதான போட்டியாளர்கள். காங்கிரஸ் கட்சியின் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளர். அவர் என்னிடம் 'மே 20-ம் தேதி பிரதமர் ராஜீவ் வருகிறார். ஹவுரா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும்’ என்றார். ஆனால், தேர்தல் பணிகளுக்காக வாக்குப்பெட்டி உள்ளிட்ட உப கரணங்கள் அன்றைய தேதியில் அந்த இடத்திலிருந்துதான் பட்டு வாடா செய்யப்படும். தவிர, அந்தத் தேதிதான் பிரச்சாரத்தின் கடைசி நாள். அதனால் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன். கோபமாக சென்றுவிட்டார்.
சில நிமிடங்களில் உள்துறை செயலர் கிருஷ்ணமூர்த்தி அழைத் தார். 'வம்பை விலைக்கு வாங்க வேண்டாம். அனுமதி கொடுத்து விடுங்கள்’ என்றார். அவரிடம் 'ஹவுராவுக்கு நான் அல்லவா தேர்தல் அதிகாரி’ என்று கேட்டேன். தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் ஏ.கே.பாசு அழைத்து, ‘இதையும் மீறி பிரதமர் ஹவுரா வுக்குள் வந்தால் என்ன செய்வாய்?' என்றார். ‘மாவட்டத்திற்குள் ராஜீவ் காந்தி நுழையக் கூடாது' என தடை உத்தரவு விதிப்பேன்’ என்றேன். வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கட்சி மே 19-ம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்தியது. அதற்கு ராஜீவ் காந்தியும் வந்தார். தேர்தல் முடிந்ததும் ஒருநாள் ராஜீவ் காந்தியிடம் இருந்து அழைப்பு, ‘கேபினட் செயலகத்தில் பணிபுரிய விருப்பமா?’ என்றார். கிட்டத்தட்ட பதவி உயர்வு அது. தனிப்பட்ட காரணங்களால் மறுத்துவிட்டேன்.
அதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அமைச்சர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி யின் சிறுதொழில் துறை அமைச்ச ராக இருந்தவர், அரசு வாகனத் தைப் பயன்படுத்தினார். அதனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டேன். மறுநாள் அமைச்சர் நேரில் வந்தார். ‘யார் பதவிக்கு வரப் போகிறார்கள் என்று தெரியுமா?' என்றார்.
‘உங்கள் கட்சிதான்’ என்றேன். ‘தெரிந்துமா தொந்தரவு செய்கிறீர்கள்?’ என்றார். நான் முதலமைச்சர் ஜோதிபாசுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன் னேன். அப்போது முதல்வரிடம் பேசுவது எளிதான காரியம். போனை அமைச்சரிடம் கொடுக்கச் சொன்னார். பேசி முடித்ததும் அமைச்சர், வருத்தம் தெரிவித்து விட்டு கிளம்பிச் சென்றார்.
மார்க்சிஸ்ட்டுகளின் பிரச்சாரத் தில் ‘தாங்கள் சாதித்துவிட்டோம்' என்ற தொனி இருக்காது. எங்கள் கட்சிக்குள்ளும் தவறுகள் இருக் கிறது' என பகிரங்கமாகப் பேசுவார்கள்.
குறிப்பாக, இலவசங்கள் கிடை யாது. தேர்தலை எதிர்கொள்வதற் குக்கூட மக்களிடம்தான் மார்க்சிஸ்ட் கட்சி கையேந்தும். பெங்காலி மொழியில் ‘துமார் ஏக் தாக்கா நோட்டு... துமார் ஏக் ஓட்டு' என்பார்கள். அதாவது, 'உன்னுடைய ஒரு ரூபாய் நோட்டையும் ஒரு ஓட்டையும் எனக்குக் கொடு' என்று அர்த்தம். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் அங்கு அறவே இல்லை. ஆரவாரம் இல்லாமல் பக்கத்து வீட்டு பெரியவர் போல மக்களிடம் பேசுவார் ஜோதிபாசு. அந்தத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி 52 சதவீத ஓட்டுக்களை வாங்கியது. காங்கிரஸ் கட்சி தனியே போட்டியிட்டு 48 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.
அந்தக் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவரான பினாய் சௌத்ரியை நம்மூர் காமராஜர் போல மக்கள் பார்த்தார்கள். ஒருமுறை பிரணாப் முகர்ஜி, ‘கம்யூனிஸ்ட்டுகள் தேசப் பற்றில்லாதவர்கள்’ என்றார். பதில் அளித்த பினாய், ‘பிரணாப் வயது குறைந்தவர். 1942-ம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் நானும் அவரது அப்பாவும்தான் வெள்ளைக்காரர்களிடம் அடி வாங்கினோம்’ என்றார் சிரித்துக் கொண்டே.
அந்த காலகட்டம் மேற்கு வங்க மக்களின் பொற்காலம் எனலாம். ஏழைகளின் அரசாங்கமாக அது. 87-க்குப் பிறகுதான் சி.பி.எம் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து நடுமட்டம் வரையில் லேசான ஒழுங்கீனம் தொடங்கியது. அரசு இயந்திரத்தை தவறாகப் பயன் படுத்தும் போக்கு ஆரம்பித்தது.
அடுத்ததாக மம்தா வந்தது பெரிய அதிசயமில்லை. பாரம்பரிய சி.பி.எம் வாக்காளர்கள்கூட, ‘இவர்களுக்கு ஒரு மாறுதல் வேண்டும்' என நினைக்க ஆரம்பிக்க தொடங்கியது அதன் பிறகுதான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT