Published : 28 Apr 2022 06:22 PM
Last Updated : 28 Apr 2022 06:22 PM
டெல்லி: பத்ம ஸ்ரீவிருது பெற்ற ஓடிசி நடன கலைஞரான குரு மயாதார் ராவத் டெல்லியிலுள்ள அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட விதம் விவாதத்தை கிளம்பியுள்ளது.
90 வயதான ஓடிசி நடன கலைஞரான குரு மயாதார் ராவத், டெல்லியில் உள்ள ஏசியன் கேம்ஸ் அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார். 2014-ஆம் ஆண்டு ஏசியன்ஸ் கேம்ஸ் அரசு குடியிருப்பில் தங்கி இருப்பவர்கள் வெளியேற வேண்டும் என்று அரசு அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குரு மயாதார் உட்பட பல கலைஞர்கள், அரசின் உத்தரவுக்கு தடை கோரி நீதிமன்றத்தை அணுகினர்.ஆனால், வழக்கு அரசுக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கலைஞர்கள் அனைவரும் ஏப்ரல் 25 அன்று வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று குரு மயாதார் உள்ளிட்ட கலைஞர்கள் தாங்கள் தங்கி இருந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களது உடைமைகள் சாலையில் வைக்கப்பட்டன.
இதுகுறித்து குரு மயாதார் மகள் கூறும்போது, ”நான் அதிகாரிகள் வீட்டுக்கு வரும்போது உணவு பரிமாறிக் கொண்டிருந்தேன். நான் உடைந்து போயிருக்கிறேன். இந்த நாட்டின் தலைசிறந்த நடன கலைஞர்களை உருவாக்கிய எனது தந்தையை நீங்கள் இவ்வாறுதான் நடத்துவீர்களா... அவருக்கு எங்கும் சொந்தமாக ஓர் அங்குல நிலம்கூட இல்லை. இப்படி தூக்கி எறிவதற்குரியவர் அல்ல என் தந்தை . இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகன்களும் அடிப்படை கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள்” என்று தெரிவித்தார்.
1980-களில் இருந்து, 40-70 வயதுக்கு இடைப்பட்ட தேசிய கலைஞர்களுக்கு, மூன்று வருட காலத்திற்கு அரசு சார்ப்பில் வாடகைக்கு தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டன. இந்த நீட்டிப்புகள் 2014-ல் காலாவதியாகியது. அதன் பின்னர் 2020-ல் இந்தக் குடியிருப்புகளை காலி செய்யுமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கலைஞர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மூத்த கலைஞர்கள் வெளியேற்றப்பட்ட விதம் விவாதத்தை கிளம்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT