Published : 28 Apr 2022 09:12 AM
Last Updated : 28 Apr 2022 09:12 AM

'பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்களை கொடுத்தார்; தலைமை பிரச்சினைக்கு தீர்வுடன் வரவில்லை' - ப.சிதம்பரம்

புதுடெல்லி: கட்சியின் தலைமை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரசாந்த் கிஷோர் எவ்வித யோசனைகளையும் முன்வைக்கவில்லை. மாறாக அவர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்கள் தான் வைத்திருந்தார். தலைமை பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் கொடுத்த தரவுகள் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. எங்க கட்சியிடம் அத்தகைய தரவு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அழகாக தரவுகளை மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிக்கு வழங்கியிருந்தார். மேலும் காங்கிரஸுடன் ஒப்பந்தம் போட்டபின்னரும் கூட திரிணமூல் காங்கிரஸ், டிஆர்எஸ், திரிணமூல் கட்சிகளுக்கும் பணியாற்றுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

கட்சிக்கு தலைவர் யார் என்பது ஆகஸ்ட் இறுதிக்குள் முடிவாகிவிடும் என்று கூறினார்.

இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் கமிட்டியின் (ஐ-பேக்) மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற களப்பணியாற்றி வருபவர் பிரசாந்த் கிஷோர். பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகள் அவரது வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றன. இந்நிலையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தங்கள் கட்சியில் இணையுமாறு பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பும் விடுத்தது. ஆனால், அதனை அவர் நிராகரித்துள்ளார். தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்.

"காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் நிராகரித்தேன். நான் கட்சியில் இணைவதை விடவும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை சீர் செய்வது தான் மிகவும் அவசியம். கட்சிக்கு தலைமையும், ஒருங்கிணைப்பும் தேவை என நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு, தேர்தல் வெற்றிக்கு கட்சியிலிருந்து சில பழைய, வயதான முகங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியதாகவும் அதனை கட்சியில் பலரும் எதிர்த்தனர் என்றும் அதனாலேயே பிரசாந்த் கிஷோருடன் உடன்பாடில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் திறமையை ப.சிதம்பரம் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து வேறு மாதிரி உள்ளது. "பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது முக்கியம் கிடையாது என்றும், கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. எனவே, கட்சி செயல்பாட்டில் மாற்றம் வர வேண்டும். எனவே, பிரசாந்த் கிஷோர் கூறும் யோசனைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் கட்சியில் மாற்றம் வரும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x