Published : 27 Apr 2022 05:08 PM
Last Updated : 27 Apr 2022 05:08 PM
புதுடெல்லி: தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை, இதனால் அந்த மாநிலங்களில் மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர், இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டின் சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனா தொற்று மற்றுமின்றி பெட்ரோல்- டீசல் விலை உயர்வு விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
பெட்ரோல் - டீசல் விலை உயர்வையடுத்து வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்று மாநிலங்களை கேட்டுக் கொள்கிறேன். நான் யாரையும் விமர்சிக்கவில்லை, வேண்டுகோள் தான் வைக்கிறேன்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். குடிமக்களின் சுமையை குறைக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும் சில மாநிலங்கள் இதனை செய்யவில்லை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில காரணங்களால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் எரிபொருளின் மீதான வாட் வரியை குறைக்க உடன்படவில்லை. இதனால் அதிக விலையின் சுமை குடிமக்கள் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கின்றனர்.
வரியைக் குறைக்கும் மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது. ஆனால் பல மாநிலங்கள் இதனை ஏற்றுக் கொண்டு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. கர்நாடகா வரிகளைக் குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.5,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கும். குஜராத் மாநிலம் மேலும் ரூ.3,500-4,000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும். வாட் வரியை குறைக்காத மாநிலங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன.
மாநில அரசு எரிபொருள் வரியை குறைத்து அதன் பயனை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்குச் செல்கிறது இதனையும் மாநிலங்கள் உணர வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளின் போது, கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வைப் பின்பற்றி, ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT