Published : 27 Apr 2022 07:01 AM
Last Updated : 27 Apr 2022 07:01 AM

ஆம்புலன்ஸுக்கு அதிக பணம் கேட்டதால் 10 வயது மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

இறந்துபோன மகனின் சடலத்தை, பைக்கில் ஏற்றிச்செல்லும் தந்தை.

திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம், சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஷ்வா (10) இரைப்பை மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோஷ்வா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மகனின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் கேட்டனர். இதனால் இலவச ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். ஆனால், அந்த ஆம்புலன்ஸை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திருப்பி அனுப்பினர்.

இதனால் பணமின்றி தவித்த ஜோஷ்வாவின் தந்தை, உறவினரின் பைக்கில், அமர்ந்து, மகனின் சடலத்தை தோளில் சாய்த்துக்கொண்டு 90 கி.மீ தூரம் பயணம் செய்து தனது சொந்த கிராமத்துக்கு சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பானது.

இதனை அறிந்த தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினரின் அராஜகத்தையும், இதற்கு துணைபோகும் மருத்துவமனை அதிகாரிகளின் போக்கையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாரத்திக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆர்.எம்.ஓ சரஸ்வதி தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 4 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x