Published : 26 Apr 2022 07:09 PM
Last Updated : 26 Apr 2022 07:09 PM
புது டெல்லி: பிரபல இந்திய தேர்தல் ஸ்ட்ரேட்டஜிஸ்ட் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டியின் (ஐ-பேக்) மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற களப்பணியாற்றி வருபவர் பிரசாந்த் கிஷோர். பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகள் அவரது வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றன. இந்நிலையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தங்கள் கட்சியில் இணையுமாறு பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பும் விடுத்துள்ளது. அதனை அவர் நிராகரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எதிர்வரும் 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என காட்டமாக விமர்சித்திருந்தார் பிரசாந்த் கிஷோர். இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவரை கட்சியில் இணையுமாறு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் அது தொடர்பாக அவர் மௌனமாக இருந்து வந்தார்.
மறுபக்கம் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். அதனை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், கட்சியின் புதிதாக இணைபவருக்கு பெரிய பதவி கூடாது எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இப்படி பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த சூழலில், அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா. "பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் 'எம்பவர்டு ஆக்ஷன் குரூப் 2024' உருவாக்கப்பட்டது. அவரைக் கட்சியில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்தார். அதோடு அவரை அந்த குழுவிலும் இருக்குமாறு சொல்லியிருந்தார். ஆனால், அதனை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துள்ளார். கட்சிக்கு அவர் கொடுத்த ஆலோசனைகளுக்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு பிறகே 8 பேர் கொண்ட எம்பவர்டு ஆக்ஷன் குரூப்பை காங்கிரஸ் கட்சி அமைத்ததாக தகவல் வெளியானது.
"காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் நிராகரித்தேன். நான் கட்சியில் இணைவதை விடவும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை சீர் செய்வது தான் மிகவும் அவசியம். கட்சிக்கு தலைமையும், ஒருங்கிணைப்பும் தேவை என நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார் பிரஷாந்த் கிஷோர்.
கட்சிக்குள் தற்போதைய அமைப்பில் மாற்றம் வேண்டும் எனவும், சோஷியல் மீடியா குழுவிலும் மாற்றம் வேண்டும் என ஐபேக், காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...