Published : 23 Apr 2022 12:24 PM
Last Updated : 23 Apr 2022 12:24 PM

பாகிஸ்தானில் பட்டம் பெற்றால் இந்தியாவில் செல்லாது; வேலையும் கிடையாது: யுஜிசி, ஏஐசிடிஇ அதிரடி

புதுடெல்லி: இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேல்படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியன தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் உயர்கல்வி பயில யாரும் செல்ல வேண்டாம். இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது.

இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இங்கு உயர் கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி. சஹஸ்ரபுதே, "பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் தரமும் கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே சீனா, உக்ரைன் என வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் சில பிரச்சினைகளால் கல்வி தடைப்பட்டு நிற்கின்றனர். அதனாலேயே பாகிஸ்தானில் மேற்கல்வி பயிலச் செல்ல வேண்டாம் என்று பெற்றோர், மாணவர் நலன் கருதி கூறியுள்ளோம்" என்றார்.

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இலங்கை போலவே அந்நியச் செலவாணி பிரச்சினையில் சிக்கியுள்ளது பாகிஸ்தான். இந்நிலையில், இந்திய மாணவர்கள் யாரும் பாகிஸ்தானில் மேற்படிப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று யுஜிசி, ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் ஒருபுறம் கண்டனக் குரலும் எழுந்து வருகிறது. எல்லா வெளிநாடுகளைப் போலவே பாகிஸ்தானையும் பாவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x