Published : 23 Apr 2022 09:31 AM
Last Updated : 23 Apr 2022 09:31 AM

5 முதல் 11 வயது குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி | மருந்து நிறுவனங்கள் அழுத்தம்; மத்திய அரசின் முடிவு என்ன?

புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், 5 முதல் 11 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் தடுப்பூசித் திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு இது குறித்து தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகிறது.

தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு (National Technical Advisory Group on Immunisation NTAGI) இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் தெரிவித்தார்.

முன்னதாக டிஜிசிஐ எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையரகம் மத்திய அரசுக்கு அளித்தப் பரிந்துரையில் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு பயாலாஜிக்கில் இ நிறுவனத்தின் கார்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தலாம் என்று பரிந்துரைத்தது. டிஜிசிஐ அனுமதியளித்தாலும் கூட தேசிய அளவில் தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவது என்பது தடுப்பூசி தொழில்நுட்பக் குழுவின் கைகளிலேயே உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே அந்தக் குழு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும்.

நாடு முழுவதும் தற்போது 12 வயது கொண்டோர் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதற்காக தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அனுமதியைப் பெறவில்லை. அதுபோலவே, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் டிஜிசிஐ பரிந்துரையை மட்டுமே கருத்தில் கொண்டு தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஏன் இந்த அழுத்தம்?
இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 33 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் இந்தியாவில் இன்னொரு கரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவும் தடுப்பூசியும்... கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நாட்டில் முதன்முதலாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட தொடங்கியது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின் , கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.

2021, அக்டோபர் 21 ஆம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை எட்டப்பட்டது. 2022, ஜனவரி 7 ஆம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்படத் தொடங்கியது. அடுத்த கட்டமாக மார்ச் 14 முதல் 12 வயது முதல் 14 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 187 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x