Published : 22 Apr 2022 03:19 PM
Last Updated : 22 Apr 2022 03:19 PM
புதுடெல்லி: இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று குஜராத் வந்தடைந்தார். அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டார். குஜராத் பயணத்தை முடித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சமாதியில் போரிஸ் ஜான்சன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது, தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ), இந்தோ-பசிபிக் விவகாரத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது, பாதுகாப்பு தொடர்பான உறவை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது போரிஸ் ஜான்சன் கூறியதாவது:
பிரதமர் மோடியை எனது சிறப்பு நண்பர். இன்று அருமையான பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளோம். இந்த வருகை எங்கள் உறவை ஆழப்படுத்தியுள்ளது. போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மக்கள் எங்களுக்கு அருமையான வரவேற்பு அளித்தனர். இது முற்றிலும் அசாதாரணமானது. இதுபோன்ற மகிழ்ச்சியான மக்கள் வரவேற்பை நான் பார்த்ததில்லை. உலகில் வேறு எங்கும் எனக்கு இதேபோன்ற வரவேற்பு கிடைத்திருக்காது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தை முதன்முறையாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.
பிரமாண்ட வரவேற்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலும் விளம்பரப் போர்டுகளைப் பார்த்தபோது நான் சச்சின் டெண்டுல்கரைப் போலவும், அமிதாப் பச்சனைப் போலவும் உணர்ந்தேன்.
சுகாதார துறையில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நானும், பிரதமர் மோடியும் விவாதித்தோம். உதாரணமாக கோவிட்க்கு எதிராக 100 கோடி மக்களுக்கு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி சீரம் நிறுவனம் போட்டளளது. இது உலகின் மருந்தகமாக இந்தியா மாற உதவியது
நான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். எனது கை வலிமையுடன் உள்ளது. எனக்கு நல்ல பலனை தந்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு மிக்க நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...