Published : 22 Apr 2022 06:32 AM
Last Updated : 22 Apr 2022 06:32 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள 7 தேர்தல் அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து ரூ.258 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் அதிக அளவாக 82 சதவீத தொகை பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காக தேர்தல் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன. இவை லாப நோக்கமற்ற அமைப்பாகும். அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இவற்றின் நோக்கம் ஆகும். இந்த அறக்கட்டளைகள் ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2020-21 நிதியாண்டில் மொத்தம் உள்ள 23-ல் 16 தேர்தல் அறக்கட்டளைகள் தேர்தல் ஆணையத்தில் நன்கொடை பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளன. இதில் 7 அறக்கட்டளைகள் மட்டுமே நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து ரூ.258.49 கோடியை நன்கொடையாக பெற்றிருப்பதாக அவை தெரிவித்துள்ளன.
2-வது இடத்தில் ஐஜத
இதில் ரூ.258.43 கோடி (99.98%) பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவாக பாஜகவுக்கு ரூ.212.05 கோடி (82%) வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) கட்சிக்கு ரூ.27 கோடி (10.45%) வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆர்ஜேடி, ஆம்ஆத்மி, எல்ஜேபி, சிபிஎம், சிபிஐ மற்றும் லோக் தந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு ரூ.19.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT