Published : 20 Apr 2022 06:31 AM
Last Updated : 20 Apr 2022 06:31 AM
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுவனை தாக்கிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலியில், 10ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் ஒருவனை முன்விரோதம் காரணமாக சிலர் கடந்த 10-ம் தேதி தனியான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்த சிறுவனை அவர்கள் பெல்ட்டால் தாக்கி, ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும், அந்த சிறுவனை, ஒருவரின் பாதத்தை நக்க வைத்து துன்புறுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிற்றுகிழமை வைரலாக பரவியது.
மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் அளித்தான். அவன் கூறுகையில், ‘‘தாக்கியவர்களில் ஒருவர் என்னை வீட்டுக்கு வந்து தனியான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு மேலும் 7 பேர் இருந்தனர். அவர்களை யார் என்று எனக்கு தெரியாது. அவர்கள் என்னை அடித்து அவமானப்படுத்தினர். ஏன் அடித்தார்கள் என தெரியவில்லை. அவர்கள் சென்ற பின் என்னை சிலர் மீட்டனர்’’ என்றான்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், தலித் சிறுவன் தாக்கப்பட்ட வீடியோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவிய அன்றே, சிறுவனின் புகார் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் சிலர் மைனர்கள். விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT