Published : 19 Apr 2022 06:32 AM
Last Updated : 19 Apr 2022 06:32 AM

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 8 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்: 7 நாட்களில் 5.29 லட்சம் பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 11-ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன டோக்கன் மையங்கள் 12-ம் தேதி திறக்கப்பட்டதால், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை டோக்கன் பெற வரிசையில் நுழைந்தனர். இதனால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்தனர். இதனால் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து டோக்கன் இல்லாமலேயே திருப்பதியிலிருந்து திருமலைக்கு பக்தர்களை தேவஸ்தானம் அனுமதித்தது. இந்த பக்தர்கள் அனைவரும் திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அடைக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை வைகுண்டம் அறையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இலவச தரிசன டோக்கன் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நேற்று திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கோடைகாலத்தை கவனத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. சாமானிய பக்தர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து வசதி, இலவச உணவு மற்றும் தரிசனத்துக்கான வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால் 7 அல்லது 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களுக்கு வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அறையில் பால், சிற்றுண்டி போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. 4 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஐபி பிரேக் தரிசனம் திங்கட்கிழமை முதல் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.

திருமலையில் ராம்பக்கீச்சா பஸ் நிலையம், மத்திய ரிசப்ஷன் அலுவலகம், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 18 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை முழுவதும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு ஊழியர்கள் சார்பில் பக்தர்களின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1,200 நாவிதர்கள் மூலம் 24 மணி நேரமும் முடிகாணிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான 7 நாட்களில் மட்டும் 5,29,926 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். 24,36,744 லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 25,971 வடை பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 2,39,287 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 10,55,572 பக்தர்களுக்கு இலவச அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது" இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x