Published : 18 Apr 2022 06:44 PM
Last Updated : 18 Apr 2022 06:44 PM
லக்னோ: "இந்து மதத்தைச் சார்ந்த ஒவ்வொரு பெற்றோரும் நான்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நான்கில் இரண்டு குழந்தைகளை தேசத்தை காக்க தியாகம் செய்ய வேண்டும்" என உத்தரப் பிரதேச பெண் துறவியான சாத்வி ரிதாம்பரா பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் துறவியான சாத்வி ரிதாம்பரா, டெல்லி ஜஹங்கீர்புரியில் நடந்த வன்முறைகளை குறிப்பிட்டு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். லக்னோவில் கூட்டம் ஒன்றில் பேசிய போது ஜஹங்கீர்புரி வன்முறையை குறிப்பிட்டு, "நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொண்டிருப்பவர்களே அனுமன் ஜெயந்தியில் வன்முறை ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அரசியல் பயங்கரவாதம் மூலமாக இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த நினைப்பவர்கள் தவிடுபொடியாக்கப்படுவார்கள்.
இந்து மதத்தைச் சார்ந்த ஒவ்வொரு பெற்றோரும் நான்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இந்த நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை வீட்டுக்கும், இரண்டு குழந்தைகளை நாட்டுக்கும் அர்ப்பணிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்தியா விரைவில் இந்து தேசமாகிவிடும்" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது 'பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆர்எஸ்எஸில் சேர்த்துவிட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா' என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சாத்வி ரிதாம்பரா, "ஆம், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. குழந்தைகளை வி.ஹெச்.பி. தொண்டர்களாக்கி தேசத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்" என்று பதில் கொடுத்தார். இவரின் இந்தப் பேச்சு சர்ச்சைகளாகி வருகிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் தஸ்னா கோவிலின் தலைமை துறவி யதி நரசிங்கானந்த் என்பவரும் இதே கருத்தை முன்வைத்து பேசினார். ஹரித்துவாரில் இஸ்லாமிய வெறுப்பை பேசிய வழக்கில் ஜாமினில் வெளிவந்திருக்கும் அவர், மீண்டும் இன்று இதே கருத்தை முன்வைத்து பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT