Published : 18 Apr 2022 11:25 AM
Last Updated : 18 Apr 2022 11:25 AM

'இசையின் மேஸ்ட்ரோ இளையராஜாவை அவமதிப்பதா?' - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

புதுடெல்லி: பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இசைஞானி இளையராஜாவை அவமதிப்பதா? எனக் கேட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அது மாநில மற்றும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தன்னிடம் தெரிவித்ததாக அவரது சகோதரர் கங்கை அமரன் தகவல் கொடுத்திருந்தார். இத்தகைய சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

"தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதையை இப்படி இழிவு செய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது.

இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன" என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

'சர்ச்சை முன்னுரை..' ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை முன்வைத்தே இளையராஜா மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x