Published : 18 Apr 2022 06:40 AM
Last Updated : 18 Apr 2022 06:40 AM

ஜார்க்கண்டில் மின் தடை நிலவும் கிராமத்தில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் சிறிய நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி சாதனை

ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் சிறிய நீர்மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி சாதனை படைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பயாங் கிராமத்தைச் சேர்ந்தவர் கேதார் பிரசாத் மஹதோ (33). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இவர், விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு நிலவுவதால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் பிரச்சினை மேலும் மோசமாக இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக சொந்தமாக நீர்மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி உள்ளார் கேதார் பிரசாத்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பள்ளியில் படிக்கும்போதே மின்சார உற்பத்தியில் எனக்கு ஆர்வம் இருந்தது. எங்கள் பகுதியில் மின்சார தட்டுப்பாடு நிலவுவதால் சொந்தமாக நிர் மின் உற்பத்தி திட்டத்தை நிறுவ முடிவு செய்தேன். இதற்காக ரூ.3 லட்சம் செலவு செய்து, அம்ஜாரியா ஆற்றில், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட டர்பைன் மற்றும் ஜெனரேட்டரை பொருத்தி சிறிய நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி உள்ளேன். 2 ஆண்டு முயற்சிக்குப் பின் இது செயல்படத் தொடங்கி உள்ளது. இது தினமும் 40 முதல் 50 கேவிஏமின்சாரத்தை உற்பத்தி செய்யும்திறன் வாய்ந்தது. எனினும் இப்போது, தினமும் 5 கேவிஏ மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது.

இதன்மூலம் கிடைக்கும் மின்சாரம் என்னுடைய நிலத்தில் நீர்ப்பாசனம் செய்வதற்கு பயன்படுகிறது. அத்துடன் எங்கள் கிராமத்தில் உள்ள கோயில் மற்றும் தெரு விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்கி வருகிறேன். இதன்மூலம் பொது இடங்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்ற என்னுடைய கனவில் ஒரு பகுதி நிறைவேறி உள்ளது. மேலும் சில கோயில்கள், தெருக்கள், பள்ளிகளுக்கும் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x