Published : 28 Apr 2016 07:42 AM
Last Updated : 28 Apr 2016 07:42 AM
கடத்திச் செல்லப்பட்ட தனது காதல் மனைவியை அவரது குடும்பத்தாரிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு, கணவரான ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
ஹைதராபாதை சேர்ந்த வங்கி ஊழியர் வினய் பாபு (28). இவரும், ஹைதராபாதில் வசிக்கும்ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட மமதா (25) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணத்திற்கு மமதாவின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அவர்களது எதிர்ப்பை மீறி இரு மாதங்களுக்கு முன்பு வினய் பாபுவும், மமதாவும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த மமதாவின் குடும்பத்தினர், காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இருவரையும் கடுமையாக மிரட்டியுள்ளனர். இதனால் பாதுகாப்பு கேட்டு இருவரும் ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் மமதா வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பாக வினய் பாபு ஹைதராபாத் போலீஸில் மீண்டும் புகார் அளித்தார். அதன் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டு, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் பகுதிக்கு சென்று மமதாவின் குடும்பதாரிடம் விசாரணை நடத்தியதில் அங்கு மமதா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மனைவியை மீட்டுத் தரக்கோரி ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு வினய் பாபு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘என் மனைவி உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் என்னை தொடர்பு கொண்டு இருப்பார். இதுவரை தொலைபேசியில் கூட என்னை அழைக்கவில்லை. அவரது குடும்பத்தார்தான் அவரை எங்கோ மறைத்து வைத்துள்ளனர். எனவே அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட் டுள்ளார்.
அதே சமயம் மமதா இரு மாதங் களுக்கு முன் வீட்டில் இருந்த 5 கிலோ தங்க நகையுடன் மாயமானதாக, அவரது குடும்பத்தினர் ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT