Published : 14 Apr 2022 07:13 PM
Last Updated : 14 Apr 2022 07:13 PM
ஷிவ்மோகா: ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷிவ்மோகா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரப்பா, "கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பாதால் ராஜினாமா செய்கிறேன். ஆனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. இந்த சர்ச்சையிலிருந்து நான் வெளியே வருவேன்" என்று கூறினார்.
நடந்தது என்ன? கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (40). இவர், அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராகவும் இருந்தார். பாஜக உறுப்பினரான இவர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் அரசின் ஒப்பந்த பணி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அவர் மீது ஈஸ்வரப்பா அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், சந்தோஷ் பாட்டீல் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரஷாந்த் அளித்த புகாரின்படி, ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க கோரி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் நேற்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடிதம் கொடுத்தனர். தன் மீதான குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா மறுத்துள்ளார்.
ஆனால், உள்கட்சியிலேயே அவருக்கு நெருக்கடி வலுத்துள்ள நிலையில் நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT