Published : 14 Apr 2022 03:18 PM
Last Updated : 14 Apr 2022 03:18 PM

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி தெற்குமேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 முதல் 104 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்கள், மத்திய இந்தியா பகுதிகளில் இயல்பானது முதல் அதற்கும் கூடுதலான அளவு மழை பெய்யக்கூடும் என்றும், இமாலய மலை அடிவாரம், வடமேற்கு இந்தியாவிலும் இதே நிலையே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், வடகிழக்கு, வட மேற்கு, தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான அளவிலேயே மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ம்ருதஞ்சய் மொஹாபத்ரா, "ஐஎம்டி கணிப்பு பெரும்பாலும் துல்லியமாகவே இருந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான கணிப்புகள் மட்டுமே முன்பின்னாக இருந்துள்ளன" என்றார்.

தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட்டும், இந்த ஆண்டு இயல்பான அளவிலேயே மழை பெய்யும் என்று கணித்துள்ளது. நீண்ட கால மழை சராசரியின்படி 98% மழை பெய்யலாம் என்று கணித்துள்ளது. 96% முதல் 106% வரையிலான மழை பதிவு இயல்பான மழைப்பதிவு என்று கணிக்கப்படுகிறது.

இந்திய மக்களின் வருமானத்தில் பாதியளவு விவசாயம் சார்ந்தே உள்ளது. ஆனால் 40% விளைநிலங்கள் சரியான போதிய பாசன நீர் இன்றி தவிப்பில் உள்ளது. அதேபோல், இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் 50% கோடைகால பயிர்களாகவே உள்ளன. அவை பருவமழையையே சார்ந்திருக்கின்றன.

அதனாலேயே விவசாயிகள் பருவமழை கணிப்பை ஆண்டுதோறும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x