Published : 13 Apr 2022 02:59 AM
Last Updated : 13 Apr 2022 02:59 AM

'அஞ்சியது நடந்துவிட்டது' - சர்ச்சையான பஞ்சாப் அதிகாரிகள் - கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி: பஞ்சாப் அரசு அதிகாரிகள் உடனான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பை அடுத்து பஞ்சாப் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து பக்வந்த் சிங் மான் அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், பக்வந்த் சிங் மற்றும் மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் , மின்துறை செயலாளர் மற்றும் பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியானது.

முதல்வர் பக்வந்த் சிங் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளர் உடன் கெஜ்ரிவால் சந்தித்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பஞ்சாப் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், "டெல்லி மக்களின் கைப்பாவையாக இருக்குமா பஞ்சாப். இந்த கூட்டம் எந்த நிலையில், எந்த பிரச்சினை அடிப்படையில் நடத்தப்பட்டது என்பதை முதல்வர் பக்வந்த் சிங் விளக்க வேண்டும். பக்வந்த் சிங் மான் பெயருக்கு மட்டுமே முதல்வரா" என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்திருந்தது. இதுதொடர்பாக விவாதிக்க கெஜ்ரிவால் தலைமைச் செயலாளரைச் சந்தித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த சந்திப்பை நியாயப்படுத்தி பேசியுள்ளார் பஞ்சாப் கேபினட் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர். அவர், "எங்கள் கட்சித் தலைவரை அரசு நிர்வாகிகள் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை. கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்த முடியும். இதில் கண்டிக்கவோ, தவறாகவோ எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக கொண்டுசெல்கின்றன. பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "டெல்லி தனது ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியை வெளிப்படுத்தியுள்ளது. இது கூட்டாட்சியின் தெளிவான மீறல். மேலும். பஞ்சாப் பெருமைக்கு அவமானம். கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இருவரும் இதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், "அஞ்சப்பட்டது நடந்து விட்டது. பக்வந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். இப்போது டெல்லியில் பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கெஜ்ரிவால் அதை நிரூபித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x