Last Updated : 12 Apr, 2022 06:59 AM

 

Published : 12 Apr 2022 06:59 AM
Last Updated : 12 Apr 2022 06:59 AM

'ஆர்கே ரோஜா அனே நேனு' - விமர்சனம், அவமானங்களை தாண்டி சாதித்த 'மினிஸ்டர்' ரோஜா

'ஆர்கே ரோஜா அனே நேனு' என ஆந்திர தலைநகர் அமராவதி மைதானத்தில் ஒலித்த வார்த்தைகள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காத்திருப்புக்கும் அவமானங்களுக்கும் பழிச்சொல்லுக்கும் கிடைத்த வெற்றி. ஆம், நடிகையாக இருந்து இப்போது 'மினிஸ்டர்' ஆகியிருக்கும் ரோஜா, இந்த நிலையை எட்ட கொடுத்த உழைப்புகளும், சந்தித்த அவமானங்களும் ஏராளம். ஒரு நடிகையாக ரோஜாவை பலருக்கும் தமிழகத்தில் தெரியும். ஆனால் ஒரு அரசியல்வாதியாக ரோஜாவை தமிழகத்தில் பலருக்கு அவ்வளவாக தெரியாது.

மிக குறுகிய காலத்தில் திரைத்துறையில் உச்சம் தொட்ட அவர், தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் தொடங்கி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி வரை ஜோடி போட்டார். பிஸியான ஆர்டிஸ்ட்' என்ற பெயர் அவருக்கு திரையுலகில் உண்டு. எந்த அளவுக்கு என்றால், சரியாக 1999ம் ஆண்டு. அந்த வருடம் மட்டும் ரோஜாவின் நடிப்பில் தமிழ், தெலுங்கு சேர்த்து பத்து படங்கள் வெளியாகின. இப்படி திரைத்துறையில் உச்சத்தில் இருந்த இதே ஆண்டில் அரசியல் என்ட்ரி கொடுத்தார்.

ரோஜாவின் அரசியல் அரிச்சுவட்டில் 'தெலுங்கு தேசம்' தான் முதல் சாய்ஸ். சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கட்சியில் இணைத்துக்கொண்டார். 'ரோஜா'வின் மவுஸை அறிந்த 'தெலுங்கு தேசம்', அதற்கேற்ப அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்தது. கட்சியின் 'மகளிர் அணித் தலைவி'யாக நியமிக்கப்பட, ஒருபுறம் சினிமா மறுபுறம் கட்சியின் களப்பணி தீவிர உழைப்பைக் கொடுத்தார். அப்போது நடந்த தேர்தல்களில் தெலுங்கு தேசத்தின் 'ஸ்டார் பிரச்சாரகர்' ரோஜாவே.

களப்பணிகளில் அவரின் ஆத்மார்த்தம், தேர்தல் 'சீட்'டை பெற்றுக்கொடுத்தது. 2004ல் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமும், தமிழகத்தின் எல்லையான சித்தூரில் உள்ள 'நகரி' தொகுதியில் போட்டி. 'தெலுங்கு தேசம்' தோல்வியை தழுவியதை போலவே ரோஜாவும் தோல்வி கண்டார். 2009-ம் ஆண்டு சந்திரகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வந்தது. இம்முறை நம்பிக்கையுடன் பணியாற்றினார். மக்கள் ஆதரவளிக்க தயாராக இருந்தாலும், உட்கட்சி சண்டையால் சோகமே மிஞ்சியது. தனது சொந்தக் கட்சியினரே எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற இம்முறையும் தோல்வியே.

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளால் கட்சிக்குள் ரோஜாவுக்கு இருந்த மவுசு குறைந்தது. இல்லை குறைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் உதாசீனப்படுத்தியது என கட்சி நிர்வாகிகளால் திட்டமிட்டே ஓரம்கட்டப்பட்டார். ஒருகட்டத்தில் ‘அயர்ன் லெக்’ (ராசியில்லாதவர்களை குறிக்க பயன்படும் சொல்) என அரசியல் வட்டாரங்களில் ரோஜாவை குறிப்பிடத் தொடங்கினர். மாற்று முகாம் செல்ல வேண்டிய நிலையில், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தலைமையில் காங்கிரஸில் சேர முடிவெடுத்த போது ஹெலிகாப்டர் விபத்தில் அவரும் இறந்துபோனார்.

கிட்டத்தட்ட மாநிலத்தின் அரசியல் சூழலே மாறிப்போயிருந்தது. தந்தையின் இறப்புக்கு பின் காங்கிரஸ் உடனான மோதலால் புதிய கட்சி தொடங்கியிருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. வளர்ந்துவரும் புதிய தலைமுறை தலைவராக அறியப்பட்ட ஜெகனை நாடினார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் முழுக்கமான 'ஜெய் ஜெகன் அண்ணா' கோஷத்துடன் ஜெகனின் நம்பிக்கை சகோதரியாக அரசியலில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கினார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரோஜாவுக்கு புதிய அடித்தளத்தை அமைத்துகொடுத்தது. கட்சியின் பீரங்கிப் பேச்சாளராக இருந்த அவருக்கு முதல் தேர்தலிலேயே வாய்ப்பு கொடுத்தார் ஜெகன். முதல்முறை எந்த தொகுதியில் போட்டியிட்டாரோ, அதே தொகுதியில் மீண்டும் போட்டி. 'நகரி' மக்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைத்தார். அதற்கு காரணமும் உண்டு. தனிப்பட்ட முறையில் 'நகரி' தொகுதியில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளார் ரோஜா. தமிழகத்தின் 'அம்மா உணவகம்' பாணியில் தொகுதியில் 'ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம்' தொடங்கி தினமும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச உணவளித்தார்.

இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல திட்டங்களை டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு நடத்தினார். இந்த உதவியை மனதில் வைத்து ரோஜாவை மக்களும் கைதூக்கிவிட்டனர். எந்தக் கட்சியால் ஓரம்கட்டப்பட்டாரோ, அதே கட்சியின் வேட்பாளரைவிட 858 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்று சட்டசபை நுழைந்தார்.

15 வருட அரசியல் பயணத்தில் ரோஜா பெற்ற முதல் வெற்றி. வெற்றிபிறகு ரோஜாவின் பேட்டி இப்படியாக இருந்தது. ' நான் 'அயர்ன் லெக்' அல்ல, 'கோல்டன் லக்' என்பதை நிரூபித்துள்ளேன்' என்று பெருமிதப்பட்டார். ரோஜா 'கோல்டன் லக்' என்பது அடுத்த ஆண்டுகளில் நிரூபணமானது. 2014ல் ரோஜாவுடன் ஒய்.எஸ்.ஆர் கட்சி ஆந்திர சட்டப்பேரவையில் முதல்முறை எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது. அதேநேரம், மூன்றாவது முறை முதல்வராகியிருந்தார் சந்திராபாபு நாயுடு.

சந்திராபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கும் சட்டசபையில் நடக்கும் விவாதங்கள் அனலாக இருந்தன. இந்த விவாதங்களில் ஹைலைட் ரோஜாவே. ஒய்.எஸ்.ஆர் தலைவராக ஜெகன் சட்டசபையில் இருந்தாலும், ரோஜாவே தெலுங்கு தேச ஆட்சியின் குறைகளை கேள்விகளாக ஆவேசத்துடன் வெளிப்படுத்தினார். இதில் மிகப்பெரிய மோதலே ஏற்பட்டு, ஒருகட்டத்தில் சந்திரபாபு நாயுடு ரோஜாவை ஒருவருடம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். ஆந்திர தேசத்தில் அப்போதைய காலகட்டத்தில் தேசிய அளவில் கவனம் ஈர்த்த தருணமாக அமைந்தது. ரோஜா தடையை நீக்க நீதிமன்ற படியேறி அதில் வெற்றிபெற்றாலும், சந்திரபாபு அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த தடையால் ஒரு வருடம் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்காத ரோஜா, அதை மக்களிடம் கொண்டுசென்று தனக்கு சாதமாக்கி கொண்டார்.

இரண்டாவது முறையும் நகரி தொகுதியின் நாயகியானவர், இப்போது ஜெகன் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராகி உள்ளார். ஜெகனின் முதல் அமைச்சரவையிலேயே அமைச்சராகும் வாய்ப்பு ரோஜாவுக்கு இருந்தது. ஆனால், சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டி இருந்ததால் இரண்டாம் சுற்றில் வாய்ப்பு கொடுத்துள்ளார் ஜெகன். பதவியேற்ற பிறகு ரோஜா, மேடையில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காலை தொட்டு கும்பிட்டு, கையை முத்தமிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

ஒருகாலத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரால் ‘அதிர்ஷடம் இல்லாதவர்' என ஓரம்கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அவர்கள் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ளார் இந்த தமிழகத்தின் மருமகள்.

சினிமாவில் நடிக்க மாட்டேன்

அமைச்சராக பதவியேற்ற ரோஜா, “எனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். எந்தப் பதவி வகித்தாலும் அதில் எனது திறமையை நிரூபிக்க முனைவேன். இனி மக்கள் பணியாற்றவே நேரம் தேவைப்படும் என்பதால் இனி சினிமாவிலும் தொலைக் காட்சியிலும் நடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x