Published : 11 Apr 2022 05:03 PM
Last Updated : 11 Apr 2022 05:03 PM
புதுடெல்லி: நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2024 வரை மூன்று கட்டங்களாக செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரிசியை பொது விநியோகத் திட்டம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் எனப் பல்வேறு வழியிலும் மக்களிடம் கொண்டு சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? - செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன.
அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும். இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.
செறிவூட்டப்பட்ட அரிசியின் அவசியம் என்ன? - இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கு அரிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கும் நம் உணவுப் பழக்கவழக்கத்திலேயே உதாரணம் உள்ளது. அரிசி இந்தியர்களின் முக்கிய உணவு. இந்தியாவில் தனிநபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.8 கிலோ அரிசியை உண்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் செறிவூட்டுவது ஏழைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உதவும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதற்கான அளவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ளது.
அதன்படி 1 கிலோ அரிசியில் 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும். இதில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும். அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மி.கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மி.கிராம்), வைட்டமின் B-3 (12.5 மி.கிராம் -20 மி.கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மி.கிராம்) இருக்கும். இந்த அரிசியை வழக்கமான அரிசியை சமைப்பது போல்தான் சமைக்க வேண்டும். சமைத்தபின்னர் இதில் எந்த வித்தியாசமும் இருக்காது.
மருத்துவர் கு.கணேசன் ஆலோசனை: "செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு கொடுக்க முன்வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைவருக்கும் அவசியமானதா என்றால் அதைப் பற்றி தீர ஆராய வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் தேவைக்கு அதிகமாக குறிப்பிட்ட சத்துகள் உடலில் சேர்வதும் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இந்த செறிவூட்டப்பட்ட அரிசிக்கான டார்கெட் குரூப்பை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
அயோடைஸ்ட் உப்பை எல்லோரும் சாப்பிடுங்கள் என்பது போல் அல்ல இந்த செறிவூட்டப்பட்ட அரசி. அயோடைஸ்டு உப்பு கொஞ்சம் அதிகமானாலும் பக்க விளைவுகள் இருக்காது. ஆனால் நல்ல ஆரோக்கியமான நபர் செறிவூட்டப்பட்ட அரிசியை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க வேண்டும் என்றால் அரசாங்கம் பெரிய அளவில் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தாமாகவே ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கத்துக்கு திரும்ப அது உறுதுணையாக இருக்க வேண்டும். மற்றபடி இதுபோன்ற செறிவூட்டப்பட்ட அரிசியை தேவைப்படுவோரை அறிந்து கொடுப்பது நலம்" என்று பொது மருத்துவர் கு.கணேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT