Published : 11 Apr 2022 09:17 AM
Last Updated : 11 Apr 2022 09:17 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பட்டியலினத்தைச் சேர்ந்த 58 வயதான ராம் சந்திர டோம். நீண்ட வரலாறு கொண்ட இந்த பொலிட் பீரோவில் முதல் பட்டியலின நிர்வாகி என்பது தான் அத்தனை கவனத்தையும் டோம் மீது குவியச் செய்துள்ளது.
யார் இந்த ராம் சந்திர டோம்? மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் சில்லா கிராமம் தான் இவரின் சொந்த ஊர். இவரது குடும்பம் மரத்தால் ஆன கைவினைப் பொருட்களைச் செய்யும் பாரம்பரியம் கொண்டது. சிறு வயதிலிருந்தே ராம் சந்திர டோம் கல்வியில் சிறந்து விளங்கினார். மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வென்ற அவர், மதிப்புமிகு NRS மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1984ல் மருத்துவரானார். ஆனால் மருத்துவர் ஆவதற்கு முன்னதாகவே டோம் அரசியலில் பிரவேசித்துவிட்டார். 70களில் நெருக்கடி காலக்கட்டத்தில் டோம், இடதுசாரி கட்சிகளின் மாணவர் பிரிவில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
1989ல் ராம் சந்திர டோம், பிர்பும் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சரியாக 30 வயதில் எம்.பி.யான அவர் அப்போது தொடங்கி 2014 வரை அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி 6 முறை எம்.பி.யாக இருந்தார். 2014ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அனுபம் ஹஸ்ராவிடம் தோல்வியடைந்தார். 6 முறை எம்.பி.யாக இருந்தும் கூட இன்றும் அவரது சொந்த ஊரான சூரியில் ராம் சசந்திர டோம் சைக்கிளில் தான் வலம் வருகிறார். அவருடைய எளிமையான வாழ்க்கை முறை மாறவே இல்லை எனக் கூறுகின்றனர் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.
வரலாற்றுத் தருணம்: கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று (ஏப்.10) அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரியே அப்பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கொண்ட புதிய மத்திய குழு, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொலிட் பீரோ நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்ட ராம் சந்திர டோமை அறிமுகப்படுத்திய சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பொலிட் பீரோவின் முதல் பட்டியலின உறுப்பினர். இது பெருமித தருணம் என்றார்.
வரலாறு இல்லை; முன்மாதிரிகள் இருக்கிறார்கள்.. தனக்குக் கிடைத்தப் பதவி குறித்து பேசியுள்ள டோம், எங்கள் கட்சியில் ஒருவர் தலைவராக வேண்டும் என்றால் இயக்கத்தில் அவரின் செயல்பாடு அதற்கானதாக இருக்க வேண்டும். கட்சியின் வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தீர்கள் என்றால் நிறைய ஜாம்பவான்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஏனோ பொலிட் பீரோவில் நிர்வாகி ஆகவில்லை. நான் ஆகிவிட்டேன். அதுமட்டும் தான் வித்தியாசம். ஆகையால் இது வரலாறு என்று நான் கருதவில்லை. சிபிஎம்.,மில் பட்டியலின பிரதிநிதித்துவம் எப்போதுமே சிறப்பாக இருந்துள்ளது.
நாடு முழுவதும் கட்சியை இப்போதைக்கு வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். நம் தேசம் இப்போது பாசிச ஆட்சியின் கீழ் உள்ளது. மேற்குவங்கத்தில் இரு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மத்தியில் பாஜக, மாநிலத்தில் திரிணமூல் என இரு சவால்கள் உள்ளன. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் நமது இயக்கத்தை இன்னும் கூர்மையாக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மூளை, முடுக்கிலும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT