Published : 09 Apr 2022 05:01 AM
Last Updated : 09 Apr 2022 05:01 AM
போபால்: மத்திய பிரதேசத்தின் சித்தி கோட்வாலி பகுதியில் "இந்திராவதி நாட்டிய சமிதி" என்ற நாடக குழு செயல்படுகிறது. இதன் இயக்குநர் நீரஜ் குந்தர், ஆர்டிஐ ஆர்வலராகவும் உள்ளார். இவர் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
எம்எல்ஏ தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்திகளை உள்ளூர் செய்தியாளர் கவுசிக் திவாரி "யூ டியூப்" சேனலில் வெளியிட்டு வந்தார். இவர் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2-ம் தேதி ஆர்டிஐ ஆர்வலர் நீரஜ் குந்தர் ஜாமீனில் வெளியில் வந்த போது அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது கவுசிக் திவாரி உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். சித்தி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் 8 பேரையும் உள்ளாடையுடன் நிற்க செய்து விசாரணை நடத்தினர். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது.
இதுகுறித்து ‘‘எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா’’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செய்தியாளர் கவுசிக் திவாரி உட்பட 8 பேரை அவமானப்படுத்த போலீஸாரே புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. மத்திய உள்துறை அமைச்சகம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக போலீ்ஸ் எஸ்எஸ்பி முகேஷ் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT