Published : 08 Apr 2022 01:23 PM
Last Updated : 08 Apr 2022 01:23 PM

இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; உள்ளூர் மொழிகளை அல்ல: அமித் ஷா பேச்சால் சர்ச்சை

உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி: "இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்.

உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.

அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் தயாராகும். வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

அமித் ஷாவின் பேச்சைத் தொடர்ந்து #stopHindiImposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x