Last Updated : 07 Apr, 2022 05:46 AM

10  

Published : 07 Apr 2022 05:46 AM
Last Updated : 07 Apr 2022 05:46 AM

மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்துத்துவா வியூகம் அமைக்கும் காங்கிரஸ்

புதுடெல்லி: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற இந்துத்துவா வியூகம் அமைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தலில் பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 4 மாநிலங்களில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், அடுத்தஆண்டு மகாராஷ்டிரா, ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த இப்போதே இந்துத்துவா கொள்கைகளை கடைபிடிக்க தொடங்கி உள்ளது.

அதற்காக, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சார்பில், ம.பி. துணைத்தலைவரும் கட்சி பொறுப்பாளருமான சந்திர பிரபாஷ் சேகர் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘‘இந்த மாதம் நடைபெற உள்ள ஹனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற முக்கிய விழாக்களின் போது கட்சியினர் அனைவரும் ராம்லீலா, ராமர் கதை மற்றும் ஹனுமன் சாலிஸா பாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ம.பி. காங்கிரஸ் முஸ்லிம் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தவறான முன்னுதாரணம்

இதுகுறித்து போபால் நகர காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத்கூறும்போது, ‘‘இந்த சுற்றறிக்கையின் மூலம் காங்கிரஸ் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. ராம நவமிக்கும், ஹனுமன்ஜெயந்திக்கும் நாம் ஏன் பஜனை செய்ய வேண்டும். இதுபோல், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளில் முஸ்லீம்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த ஏன் உத்தரவிட வில்லை?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி.க்கு அடுத்த நிலையில் ம.பி.யிலும் இந்துத்துவா கொள்கையில் பாஜக காட்டிய தீவிரத்துக்கு பலன் கிடைத்தது. கடந்த தேர்தலில் அதிக தொகுதி பெற்ற கட்சியாக இருந்தும் காங்கிரஸின் ஆட்சி நீடிக்கவில்லை. கட்சி எம்எல்ஏ.க்கள் சிலருடன் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தார். அதன் காரணமாக வந்த இடைத்தேர்தலில் கூடுதல் தொகுதிகளுடன் பெரும்பான்மை பெற்ற பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ம.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறும்போது, ‘‘சுற்றறிக்கை மூலம் காங்கிரஸின் போலித்தன்மை வெளிப்பட்டுள்ளது. ஏனெனில், ராமரும், ராமர் பாலமும் கற்பனை எனக் காங்கிரஸார் கூறிவந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும் அவர்கள் எதிர்த்தார்கள். எனவே, வரும் தேர்தலில் இந்துத்துவாவை கையில் எடுக்க முயலும் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்காது’’ என்றார்.

இதனிடையே, 3 முறை எம்.பி.யாக இருந்த அமேதியின் கோயிலுக்கு பூஜை பொருட்களை அனுப்பியுள்ளார் ராகுல் காந்தி.வரவிருக்கும் சைத்ர நவராத்திரியின் பூஜைக்கான இப்பொருட்களை முறையாக விநியோகம்செய்யும் பொறுப்பு, அமேதிமாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிட மும் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவையில் இங்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி யுற்ற ராகுல், கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டு எம்.பி.யானது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ராம்லீலா, ராமர் கதை மற்றும் ஹனுமன் சாலிஸா பாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x