Published : 06 Apr 2022 11:26 AM
Last Updated : 06 Apr 2022 11:26 AM
ஏப்ரல் 2 முதல் 11 ஆம் தேதி வரை இந்துக்கள் நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். ஆகையால் இந்த 9 நாட்களும் தெற்கு டெல்லியில் இறைச்சிக் கடைகள் மூடியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்புக்கு முன்னதாக தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயர் முகேஷ் சூர்யன் அளித்தப் பேட்டியில், "நவராத்திரி நாட்களில் 99% வீடுகளில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்தப்படுவதில்லை. அதனால், இறைச்சிக் கடைகளை மூடும் முடிவை எடுத்துள்ளோம். தெற்கு டெல்லி மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் நாளை முதல் (ஏப்.6) முதல் மூடப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
மேயரின் முடிவை ஆதரித்துப் பேசிய பாஜக மேற்கு டெல்லி எம்.பி. பிரவேஷ் சாஹிப் வெர்மா, "முஸ்லிம்கள் அசாதுதீன் ஒவைஸி போன்றோரின் பேச்சால் ஈர்க்கப்படக் கூடாது. இந்து மத திருவிழாக்களை மதிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களும் இஸ்லாமிய விழாக்கள் வரும்போது அதன் மாண்பினை மதித்து செயல்படுவர்" என்று கூறியுள்ளார்.
வலுக்கும் எதிர்வினை: இதற்கிடையில் தெற்கு டெல்லி மேயரின் உத்தரவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில துணைத் தலைவர் அபிஷேக் தத்தா, ஒரு மாநகராட்சிக்கான இத்தகைய உத்தரவை பிறப்பிக்க அதன் ஆணையரால் மட்டுமே முடியும். ஆனால் மேயர் இதனைக் கூறியிருப்பது ஊடக வெளிச்சம் பெறும், அவரது தலைவர்களின் கவனம் பெறும் செயலைத் தவிர வேறில்லை என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தெற்கு டெல்லியில் வசிக்கிறேன். அரசியல் சாசனம் நான் விரும்பும்போது இறைச்சி உண்ணவும், வியாபாரிகள் இறைச்சி வியாபாரம் செய்யவும் சுதந்திரம் தந்துள்ளது. முற்றுப்புள்ளி என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை உணவு உண்பதில்லை. காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றவர்களையும், அங்கு சுற்றுலா வருபவர்களையும் பொது இடங்களில் உணவு உண்ணக் கூடாது என தடை விதிக்கலாமா? பெரும்பான்மை தான் சரி என்று தெற்கு டெல்லி நினைத்தால் அது ஜம்மு காஷ்மீரிலும் சரியாகத்தானே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...